பொங்கல்: தலைவர்கள் வாழ்த்து!

Subscribe to Oneindia Tamil

Pongal festival

சென்னை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உட்பட பல தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி:

தைத் திங்கள் முதல் நாள்! தமிழர் திருநாள்! பொங்கல் நன்னாள் என தமிழர் வாழும் இடங்களில் எல்லாம் எழுச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடப்படுகிறது.

உழைத்துப் பயன் விளைக்கும் உழவர் சமுதாயம் அறுவடை செய்த நெல்லை ஆக்கி உண்பதற்கு முன் உடன் உழைத்தவர்க்குப் பகிர்ந்து வழங்கி, விளைச்சலுக்குத் துணைபுரிந்த வான்மழைக்கும், கதிரவனுக்கும் கால்நடைகளுக்கும் நன்றிகூறி மகிழ்ந்து கொண்டாடும் பொன்னாள் பொங்கல் நன்னாள்!

இவ்வாண்டில் தமிழகத்தில் மழைவளம் பெருகி வேளாண் தொழிலுக்குப் பேருதவி புரிந்திடும் காவிரி ஆற்றின் மேட்டூர் அணை 8 முறை நிரம்பி நீர்வளம் செழித்து, விளைச்சல் மிகுந்து விவசாயிகள் மகிழ்ந்திட இயற்கையும் பேருதவி புரிந்துள்ளது.

ரூ.7000 கோடி அளவுக்கு விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்தும், கடந்த ஆண்டில் 6 லட்சத்து 31 ஆயிரத்து 283 விவசாயிகளுக்கு ரூ.1251 கோடி ரூபாய், இவ்வாண்டில் ரூ.1360 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 4 லட்சத்து 21 ஆயிரத்து 521 விவசாயிகளுக்கு ரூ.881 கோடியே 40 லட்சம் பயிர்க் கடன்கள் வழங்கியும்,

கரும்புக்கும், நெல்லுக்கும் கூடுதல் விலைகள் தந்தும், நிலமற்ற 1 லட்சத்து 37 ஆயிரத்து 995 ஏழை விவசாயத் தொழிலாளர்கள்-விவசாயிகள் குடும்பங்களுக்கு 1 லட்சத்து 60 ஆயிரத்து 671 ஏக்கர் இலவச நிலம் வழங்கியும், விவசாயத் தொழிலாளர்கள்-விவசாயிகள் சமூகப் பாதுகாப்பு-நலத் திட்டத்தின்கீழ் 2 லட்சத்து 13 ஆயிரத்து 688 விவசாயக் குடும்பங்களுக்கு 107 கோடியே 94 லட்சத்து 31 ஆயிரத்து 949 ரூபாய் உதவித் தொகைகளாக வழங்கியும், வரலாறு காணாத வகையில் இந்த அரசும் விவசாயிகளை அரவணைத்து வருகிறது.

இத்தகைய சூழ்நிலையில் கொண்டாடப்படும் பொங்கல் திருநாளில் "உலகத்தார்க்கு ஆணி" என அய்யன் திருவள்ளுவர் புகழ்ந்து பாடிய உழவர் பெருங்குடி மக்களுக்கும், ஏனைய உழைப்பாளர்கள் உள்ளிட்ட தமிழக மக்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்து, எல்லோரும் எல்லாமும் பெற இணைந்து பாடுபடுவோம் என இத்திருநாளில் அனைவரும் சூளுரைப்போமாக!.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

ஜெயலலிதா:

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்:

மங்கலப் பொங்கல் திருநாளை உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் இனிய தமிழ் மக்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த பொங்கல் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர்களின் வாழ்க்கைக்கு கிடைத்த நம்பிக்கைக்குரிய அரிய பொன் மொழியாகும். அதன்படி, தை வந்தால் நமக்கு ஒரு பொன்னான எதிர்காலம் வரும் என்ற நம்பிக்கையோடு இன்முகம் காட்டி இத்திருநாளை அனைவரும் இருகரம் கூப்பி இனிதே வரவேற்போம்.

உழவுத் தொழில் வேறு தொழில் செய்பவர்களுக்கெல்லாம் உணவளித்துத் தாங்குவதால், உழவர்கள் உலகம் என்னும் தேருக்கு அச்சாணி போன்றவர்கள். அப்படிப்பட்ட உழவர்கள் தங்கள் உழைப்பின் பெருமையை உலகிற்கு எடுத்துக்காட்டும் நாள் பொங்கல் திருநாள்.

இந்த பொங்கல் நன்னாளில் அனைவரது இல்லங்களிலும் பொங்கல் பொங்கட்டும்! மகிழ்ச்சி நிரந்தரமாகத் தங்கட்டும்! வளம் கொழிக்கட்டும்! நலம் தழைக்கட்டும்! புது வாழ்வு பூத்துக் குலுங்கட்டும்! என மனமார வாழ்த்தி என் அன்புக்குரிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த பொங்கல் திருநாள் வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

வைகோ:

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பொங்கல் புத்தாடைக்கு வழி இன்றி, வீட்டுக்குப் புதுச் சுண்ணாம்பு பூசக் காசு இன்றி, அவதிப்படும் அவலம். மின் வெட்டாலும், உரத் தட்டுப்பாட்டாலும், பயிர்க்கடன் வழங்காகக் கொடுமையாலும், தங்கள் விளைபொருளுக்கு லாபகரமான விலை இன்றியும் துயர்ப்படும் விவசாயிக்கு, இந்தத் தைத்திருநாளுக்குப் பின்னராவது, வேதனை தீரட்டும் விடியல் உதிக்கட்டும்.

ஆயிரமாயிரம் ஆண்டுகளாகத் தழைத்து வந்த பழந்தமிழரின் பண்பாடும், நாகரீகமும், பாதுகாக்கும் உறுதி பூண்டு, தமிழ்நாட்டு மக்கள், தைப் பொங்கலைக் கொண்டாடவும், விவசாயிகளின் வளமான வருங்காலத்துக்கும், கண்ணீர்க் கடலில் தத்தளிக்கும் ஈழத்தமிழர்களின் துன்ப இருள் மறைந்து, அவர்களுக்கு உரிமை நல்வாழ்வு மலர்வதற்கும் இத் தைத்திருநாள் வழி அமைக்க வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்:

பொங்கல் திருநாள், உழைப்புக்கு உயர்வு தரும் நாள், அதனாலேயே இந்த நாள் எல்லா தரப்பு மக்களாலும் கொண்டாடப்படுகிறது. உலகத்துக்கு அச்சாணி போல உள்ள உழவர்களின் நிலை, இன்று கவலைதரத்தக்க நிலையில் உள்ளது. பாடுபட்டு உழைத்தும் பலனில்லை.

எல்லா தரப்பு மக்களுக்கும் உணவு படைக்கும் தாயுள்ளம் கொண்ட விவசாயிகளை கைதூக்கி விடுவதே எல்லோரது கடமை. சமுதாயத்தில் சமத்துவம் மட்டும் போதாதது. சமவாய்ப்பும் தேவை. அப்போதுதான் சமவாழ்வு கிடைக்கும். இப்பொங்கல் திருநாள் சமவாழ்வு பொங்கலாக அமைய வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார்:

பொங்கல் திருநாள் ஜாதி, மத, மொழி வேறுபாடுகளை கடந்த கொண்டாடப்படும் பெருநாள். தமிழ் மக்களை ஒற்றுமைப்படுத்தும் நாள். அனைவரும் உழைக்க வேண்டும். உழைத்துப் பெற்ற செல்வத்தை பகிர்ந்து உண்ண வேண்டும் என்ற தத்துவத்தை பொங்கல் திருநாள் பறை சாற்றுவதால் இது தலைசிறந்த சமத்துவ நாளாக திகழ்கிறது.

பயங்கரவாதம், வன்முறை, சமூக தீமைகள் போன்ற கொடுமைகள் அழிந்து மக்கள் நிம்மதியாக வாழும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும். உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களுக்கு மனம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள் எனக் கூறியுள்ளார்.

திருமாவளவன்:

விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

உலகில் வாழும் மாந்தரினத்தில் பலவகை மரபினங்கள் உள்ளன. ஒவ்வொரு மரபினத்திலும் பல்வேறு தேசிய இனங்கள் உண்டு. திராவிட மரபினத்தில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிவழி தேசிய இனங்கள் உள்ளன என்று மானுடவியல் வல்லுநர்களின் கருத்து ஆகும். அவற்றில் தமிழ்த் தேசிய இனம், உலக மாந்தரினத்திலேயே மூத்த இனம் அல்லது முதல் இனம் என்றும் அறியப்படுகிறது. ஆதலால் தமிழினமே ஒரு மரபினமாகவும் தேசிய இனமாகவும் விளங்குவதை அறியலாம்.

அத்தகைய சிறப்புக்குரிய தமிழினம், பல்வேறு வகையான பண்பாட்டுப் கூறுகளை இழந்து, தனித்தன்மையையும் இழந்து தவிக்கிறது. எனினும், பொங்கல் திருநாள் என்னும் இந்த ஒரே திருநாளை, தமிழினத்தின் பண்பாட்டு அடையாளமாகப் பாதுகாத்து வருவது ஆறுதல் அளிக்கிறது.

இத்தகைய பாரம்பரிய பெருமைக்குரிய பண்பாட்டுத் திருநாளில், உலகமெங்கும் வாழுகிற தமிழ்ப் பெருங்குடி மக்களுக்கு எமது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். விவசாயிகளின் வாழ்வில் மறுமலர்ச்சிப் பொங்கவும், தமிழீழம் விரைவில் மலரவும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.

அதே போல தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், இந்திய கம்யூனிஸ்டு மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், எம்.ஜி.ஆர். கழகத் தலைவர் ஆர்.எம். வீரப்பன், திராவிடர் கழகத்தலைவர் கி. வீரமணி, புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உள்பட பலரும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+