12 ஆண்டுக்கு பின்.. ராமாவரம் தோட்டத்தில் ஜெ.!

Subscribe to Oneindia Tamil

Jayalalitha and MG Ramachandran

சென்னை: மறைந்த முதல்வரும் அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 92வது பிறந்தநாளையொட்டி அவர் வாழ்ந்த ராமாவரம் தோட்டத்திற்கு 12 ஆண்டுகளுக்குப் பின் இன்று சென்றார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

மக்கள் திலகம், புரட்சித் தலைவர் என்று தமிழக மக்களாலும், அதிமுகவினராலும் அன்புடன் அழைக்கப்பட்ட எம்.ஜி.ஆர். வாழ்ந்த இல்லம் சென்னை அருகே உள்ள ராமாவரத்தில் உள்ளது. கடைசிக்காலம் வரை இங்குதான் எம்.ஜி.ஆர். வாழ்ந்து மறைந்தார்.

எம்ஜிஆர் மறைவுக்குப் பின் (ஜானகி அம்மையார் மறைவுக்கு வந்ததைத் தவிர) இந்தப் பக்கம் எட்டிப் பார்த்ததில்லை ஜெயலலிதா. அந்த தோட்டமும் இல்லமும் உடைந்து சிதிலமடைந்து வரும் நிலையில் அதை செப்பனிட்டு பராமரிக்கக் கூட அவர் முன் வரவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

இந் நிலையில் தான் விஜய்காந்தும், சரத்குமாரும் எம்ஜிஆர் பெயரைச் சொல்லி ஓட்டு வேட்டையாடி அதில் வெற்றியும் பெற ஆரம்பித்துள்ளனர். இதையடுத்து எம்.ஜி.ஆர் அபிமானிகளின் இதயங்களை மீண்டும் வெல்ல அவரது பிறந்தநாளையொட்டி ராமாவரம் தோட்டத்துக்கு போக முடிவு செய்தார் ஜெயலலிதா.

வழக்கமாக எம்ஜிஆர் பிறந்தநாள் என்றால் சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு அத்தோடு புரோகிராமை முடித்துக் கொள்வார்.

ஒரு விழா மலரும் வெளியிடுவார். அதை ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக் கொள்வார். பின்னர் அங்கு கூடும் அதிமுகவினருக்கு இனிப்புகள் வழங்கப்படும். இந்த நிகழ்ச்சிகள் இன்றும் நடந்தன.

தலைமைக் கழகத்தில் எம்ஜிஆர் பிறந்த நாளை கொண்டாடி முடித்துவிட்டு நேராக ராமாவரம் சென்றார் ஜெயலலிதா.

அங்கு அதிமுகவினர் சார்பில் பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது. பெரும் திரளான அதிமுகவினர் கூடி தாரை, தப்பட்ைடகள் முழங்க, உற்சாகமாக ஜெயலலிதாவை வரவேற்றனர்.

பின்னர் எம்.ஜி.ஆர். தோட்டத்திற்குள் நுழைந்த ஜெயலலிதா, நுழைவாயில் அருகே இருந்த கொடிக் கம்பத்தில் அதிமுக கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் கல்வெட்டையும் அவர் திறந்து வைத்தார்.

பிறகு அங்குள்ள எம்.ஜி.ஆர். நினைவு மண்டபத்திற்கு சென்ற ஜெயலலிதா அங்குள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினார்.

ராமாவரம் தோட்டத்திற்கு வந்த ஜெயலலிதாவை எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள்களான கீதா, சுதா, ஜானகி, ராதா, நிர்மலா ஆகியோரும் அவர்களது குடும்பத்தினரும் வரவேற்றனர்.

பின்னர் அவர்களுடன் பேசிய ஜெயலலிதா அவர்களுடன் ேசர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நான் இங்கு வருவதே இல்லை என்றும் சில இதழ்கள் தவறான செய்தியை வெளியிட்டுள்ளன.

1995ம் ஆண்டு எம்.ஜி.ஆரின் துணைவியார் ஜானகி அம்மையாரை சந்திக்க வந்தேன். பின்னர் அவர் 1996ம் ஆண்டு மறைந்தபோது மீண்டும் இங்கு வந்துள்ளேன். (இது நடந்து 12 ஆண்டுகள் ஆகின்றன)

இப்போது இங்குள்ள வாய் பேச முடியாதோர், காது கேளாதோர் பள்ளியின் விழாவுக்கு வருமாறு என்னை அழைத்திருந்தனர். அதை ஏற்று வந்துள்ளேன். மேலும், எம்.ஜி.ஆர். அவர்களின் குடும்பத்தினரும் என்னை அழைத்திருந்தனர். அதை ஏற்று வந்துள்ளேன்.

இது எங்களது இல்லம். எப்போது வேண்டுமானாலும் வருவோம், செல்வோம்.

எம்.ஜி.ஆரின் உண்மையான வாரிசுகள் நாங்கள்தான். எம்.ஜி.ஆரால் நிறுவப்பட்ட கட்சி அதிமுக. அதற்கு நான்தான் தலைவர், பொதுச் செயலாளர். எனவே வேறு யாரும் எம்.ஜி.ஆர். மீது உரிமை கோர முடியாது. வாரிசாக முடியாது என்றார் ஜெயலலிதா.

பின்னர் எம்.ஜி.ஆர். நினைவு வாய் பேசாதோர், காது கேளாதோர் பள்ளிக்குச் சென்ற ஜெயலலிதா பள்ளிக்கூடத்தைச் சுற்றிப் பார்த்தார். அங்கு மாணவ, மாணவியருக்கு பாடம் நடத்தப்படும் விதம் குறித்துக் கேட்டறிந்தார். மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகளையும் பார்த்து ரசித்தார். பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளையும் அவர் வழங்கினார்.

ஜெயலலிதாவின் வருகையையொட்டி ராமாவரம் தோட்டம் முழுவதும் புதுப்பிக்கப்பட்டிருந்தது. கேட்பாரற்று, சிதிலமடைந்து கொண்டிருந்த எம்.ஜி.ஆர், அவரது தாயார் சத்யாவதி அம்மையார், மனைவி ஜானகி அம்மையார் ஆகியோரது சிலைகள் புதுப் பூச்சு கண்டிருந்தன.

ஜெயலலிதாவுடன் சசிகலாவும் ராமாவரம் தோட்டத்துக்கு சென்றார்.

மேலும் முன்னாள் அமைச்சர்கள் முத்துசாமி, செங்கோட்டையன், மதுசூதனன், சுலோசனா சம்பத், தம்பிதுரை, ஜெயக்குமார், பன்னீர்செல்வம், செம்மலை, வளர்மதி, தளவாய் சுந்தரம், வேலுசாமி, சண்முகம், பொள்ளாச்சி ஜெயராமன், பி.எச். பாண்டியன், மாவட்டச் செயலாளர்கள் சேகர்பாபு, கலை ராஜன், எம்எல்ஏக்கள் பால கங்கா, பதர் சயீத், நடிகர்கள் எஸ்.வி. சேகர், முரளி உள்ளிட்டோரும் வந்திருந்தனர்.

விஜய்காந்த்-சரத்குமார்:

அதே போல தே.மு.தி.க. சார்பில் கட்சி அலுவலகத்தில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா நடக்கிறது. அதில் கட்சியின் தலைவர் விஜய்காந்த் பங்கேற்கிறார்.

அதே போல அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் சரத்குமாரும் தனது கட்சி அலுவலகத்தில் நடைபெறும் விழாவில் எம்.ஜி.ஆர். படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

அரசு விழா:

கிண்டியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு தமிழக அரசின் சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் எம்.ஜி.ஆர். சிலைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அமைச்சர்கள் பரிதி இளம்வழுதி, பூங்கோதை, சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்ரமணியன், மத்திய அமைச்சர் ரகுபதி ஆகியோரும் மாலை அணிவித்தனர்.

சென்னை தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் பாஜக தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான திருநாவுக்கரசர், எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம். வீரப்பன் ஆகியோர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+