For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கனிமொழிக்கு அமைச்சர் பதவியா?-கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

Kanimozhi

சென்னை: ராமேஸ்வரம் கோவிலில் இறந்தவை பசுக்கள் அல்ல, அவை கன்றுக் குட்டிகள். அவை தாய்ப்பால் கிடைக்காமல் தான் பலியாகியுள்ளன, பட்டினியால் அல்ல என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:

ராமேஸ்வரம் கோவிலில் 15 பசுக்கள் இறந்து விட்டதாக ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். இதற்காக இந்த அரசைக் கலைக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் சொன்னது போல இறந்தவை பசு மாடுகள் அல்ல. மாறாக கன்றுக் குட்டிகள்தான். போதிய அளவுக்கு தாய்ப்பால் கிடைக்காத காரணத்தால்தான் அவை இறந்துள்ளன. சிலர் கன்றுகளை கொண்டு வந்து கோவிலில் விட்டு விட்டுச் சென்றதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அவை பட்டினியால் இறக்கவில்லை. தாய்ப்பால் இல்லாமல் இறந்துள்ளன.

பசுக்கள் இறந்ததற்காக எனது அரசை டிஸ்மிஸ் செய்யக் கோரும் ஜெயலலிதாவுக்கு ஒரு சம்பவத்தை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில்தான், கோவில்களில் தானமாக கொடுக்கப்பட்ட பசு மாடுகள் ஏலம் விடப்பட்டு கேரளாவுக்கு அடிமாடுகளாக கொண்டு செல்லப்பட்டு வெட்டப்பட்டன. அந்த ஏல வியாபாரத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை உத்தரவு கூட பிறப்பித்தது என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

மேலும் 2004ம் ஆண்டில் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் திருச்செந்தூர் கோவிலில் 15 மாடுகள், தானமாக கொடுக்கப்பட்ட பசுக்கள் இறந்தன. அதற்குப் பொறுப்பேற்று ஜெயலலிதா ராஜினாமா செய்தாரா?. அவர் அவ்வாறு ராஜினாமா செய்திருந்தால் நாமும் ராஜினாமா செய்திருப்போம்.

அவரது ஆட்சிக்காலத்தில் பசுக்கள் மட்டும் இறக்கவில்லை. மகாமகத்தன்று கும்பகோணத்திலும், சென்னையில் வெள்ள நிவாரண உதவியைப் பெறக் காத்திருந்த 100 மனிதர்களும் கூட நெரிசலில் சிக்கி உயிரிழந்ததும் ஜெயலலிதாவின் ஆட்சியில் தான். அதற்குப் பொறுப்பேற்று ஜெயலலிதா ராஜினாமா செய்தாரா?.

கோவில்களில் தானமாகத் தரப்பட்டுள்ள பசுக்கள், கன்றுகளை பாதுகாக்க போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

கனிமொழிக்கு அமைச்சர் பதவியா?:

சில இதழ்களில் கனிமொழிக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பதவி கொடுக்கப்படவுள்ளாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. இது ஊகமான செய்தி. இதில் உண்மை இல்லை. வெறும் வதந்தியே இது.

அமைச்சர் பதவிக்காக கனிமொழி ஏங்கிக் கொண்டிருக்கவில்லை. அப்படி இருக்கையில், இப்படிப்பட்ட கேள்விகளுக்கு அவசியமே இல்லை.

(பாமகவின் நாளிதழான தமிழ்ஓசையில், கனிமொழிக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாக செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது)

ரேஷன் சிமென்ட் விநியோகம்:

சலுகை விலையில் மூடை ஒன்றுக்கு ரூ. 200க்கு சிமென்ட் வழங்கும் திட்டம் படிப்படியாக முறைப்படுத்தப்படும். இதில் எந்தவித முறைகேடும் நடக்காமல் அரசு தீவிரமாக கண்காணிக்கும்.

அனைத்துத் தரப்பினரையும் திருப்திப்படுத்த அரசு முயற்சிக்கிறது. குறிப்பாக ஏழை மக்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்ய அரசு ஆவலோடு உள்ளது.

நாடு முழுவதும் சிமென்ட் விலை கடுமையான அளவில் உயர்ந்து காணப்படுகிறது. அதேசமயம், சிமென்ட் விலையைக் குறைக்க தமிழகம் மட்டும்தான் நடவடிக்கை எடுத்துள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட கட்ட வரைபடம் இல்லாதவர்களுக்கும் சிமென்ட் சலுகை விலையில் வழங்கப்படும் என்று அரசு எடுத்த முடிவில் தவறில்லை. இதன் மூலம் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களும், 100 சதுர அடி முதல் 200 சதுர அடிக்குள் வீடு கட்டுவோருக்கும் இதனால் பலன் கிடைக்கும்.

இவ்வளவு குறுகிய அளவுக்குள் வீடு கட்டுவோருக்கு 15 முதல் 20 மூடை சிமென்ட்தாந் தேவைப்படும். இவர்களால் வரைபட அங்கீகாரத்திற்காக காத்திருக்க முடியாது. எனவேதான் இவர்களுக்கும் சலுகை விலையில் சிமென்ட் கிடைக்கும் என்ற எண்ணத்தில்தான் வரைபடம் அங்கீகரிக்கப்படாதவர்களுக்கும் சிமென்ட் வழங்க முடிவு செய்யப்பட்டது.

1000 சதுர அடிக்கு வீடு கட்டுவோருக்கு 100 மூட்டை சிமென்ட் போதாது என்பதை நானும் ஒத்துக் கொள்கிறேன். படிப்படியாக இவர்களுக்கு கூடுதல் சிமென்ட் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். சிமென்ட் இருப்பைப் பொறுத்து இதுதொடர்பாக முடிவெடுக்கப்படும்.

தனியார் சிமென்ட் உற்பத்தியாளர்கள் மாதத்திற்கு 20லட்சம் மூட்டை சிமென்ட் தயாரித்துத் தருவதாக உறுதியளித்துள்ளனர். கூடுதல் சிமென்ட் கிடைத்தால் நடுத்தர வர்க்கத்தினருக்கு 100 சிமென்ட் மூடைகளுக்கும் மேல் வழங்க முடியும்.

சிமென்ட் விநியோகத்தில் எந்தவித தவறும் நடக்காமல் தீவிரமாக கண்காணிக்கும்படி மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X