நாடு முழுவதும் நாளை வங்கிகள் ஸ்டிரைக்-3 நாட்களுக்கு கஷ்டம்

டெல்லி: நாடு முழுவதும் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் நாளை ஸ்டிரைக் செய்கின்றன. இதனால் தொடர்ந்து 3 நாட்களுக்கு வங்கிச் சேவைகள் கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை இணைப்பது, புதிய ஓய்வூதியத் திட்டம் போன்ற மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு வங்கி ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் இந்தியா முழுவதும் உள்ள வங்கிகள் நாளை ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளன. இந்த வேலை நிறுத்தத்தில் வங்கிப் பணியாளர்கள் மட்டுமின்றி அதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.
பணிபுரியும்போது உயிரிழந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும், வங்கிப் பணிகளை அவுட் சோர்சிங் செய்வதை கைவிட வேண்டும், ஊழியர்களின் ஊதிய விகிதத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை வங்கி ஊழியர்கள் முன் வைத்துள்ளனர்.
வேலைநிறுத்தத்துக்கு ஊழியர்களின் 5 சங்கங்களும், 4 வங்கி அதிகாரிகள் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் நாளை வங்கிப் பணிகள் முழுமையாக பாதிக்கப்படும். அனைத்து வங்கிகளின் முன்பு போராட்டம் நடத்தப்படும் என்றும் வங்கிப்பணியாளர் சங்கங்கள் அறிவித்துள்ளன.
நாளை ஸ்டிரைக், நாளை மறுநாள் குடியரசு தின விழா வருகிறது. எனவே அன்றும் தேசிய விடுமுறை. ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல விடுமுறை. இதனால் 3 நாட்களுக்கு வங்கிச் சேவை இருக்காது என்பதால் வாடிக்கையாளர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications