அழகிரிக்கு சல்யூட் அடிக்கும் டிஜிபி-வைகோ குற்றச்சாட்டு
தஞ்சாவூர்: முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கில் தொடர்புடைய முதல்வரின் மகன் அழகிரிக்கு டிஜிபி சல்யூட் அடிக்கிறார் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
தஞ்சையில் மதிமுக சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் அவர் பேசியதாவது,
தஞ்சையில் நிவாரணம் கேட்டு வந்த விவசாயிகளை பார்த்து தஞ்சை மாவட்ட கலெக்டர் கேலி செய்கிறார். பத்திரிகை போட்டோகிராபர்கள் வந்துள்ளனர். அவர்களுக்கு போஸ் கொடுங்கள். உங்கள் பிரச்சனை தீரும். இங்கிருந்து வெளியேறுங்கள் எனக் கூறியுள்ளார்.
மக்கள் வரிப்பணத்தில் தான் கலெக்டருக்கும், முதல்வருக்கும் சம்பளம் வழங்கப்படுகிறது என்பதை மறந்துவிடக் கூடாது.
அதிமுக ஆட்சியில் 10,500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்து உபரியை வெளி மாநிலத்துக்கு கொடுத்தனர். இப்போது விவசாயிகளுக்குக் கூட மின்சாரம் கிடைக்கவில்லை என்றால், திறமையற்ற நிர்வாகம் தான் காரணம்.
திருத்த முடிந்தவர்களை, போராடியாவது திருத்த முடியும். இவர்கள் திருத்த முடியாதவர்கள். ஜனநாயக வழியில் இவர்களை தூக்கி எறிவோம்.
கடந்த இரண்டரை மாதத்தில் தஞ்சை மாவட்டத்தில் தினமும் தலா 2,500 டன் வீதம், ஒன்றரை லட்சம் டன் கரும்பு அறவை செய்து, அதற்கான பணம் விவசாயிகளுக்கு இன்னும் பட்டுவாடா செய்யப்படவில்லை.
முதல்வர் டிவி துவங்கினார். அதை 30 நாட்களுக்குள் அவரால் துவங்க முடிந்தது. அதன் நிர்வாக இயக்குநர் பேட்டியில், ஒவ்வொரு நாளும் முதல்வர், சில மணி நேரம் எங்களுக்காக ஒதுக்குகிறார். நிகழ்ச்சி எப்படி இருக்கவேண்டும் என யோசனை கூறுகிறார். சினிமா நட்சத்திரங்களுக்கு அவரே தொடர்பு கொண்டு பேசுகிறார் என்கிறார்.
முதல்வரைச் சுற்றி 5,6 அதிகாரிகள், அமைச்சர்கள் இருந்து கொண்டு தமிழகத்தை பாழ்படுத்துகின்றனர். அவரது குடும்பம் அதிகார மையமாக செயல்படுகிறது.
நெல்லையில் கடந்த மாதம் ஒரு மகனுக்கு (ஸ்டாலின்) விழா எடுத்தார். மதுரையில் ஒரு மகனுக்கு (அழகிரி) பிறந்த நாளாம். ஊரெல்லாம் தட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட பலரும் முதல்வர் மகனுக்கு விளம்பர தட்டிகள் வைத்துள்ளனர்.
முதல்வர் மகனைப் பார்த்தால் டிஜிபி முதல் அத்தனை பேரும் சல்யூட் அடிக்கின்றனர். முதல்வர் மகனுக்கு வைக்கப்படும் தட்டிகள் தொண்டுள்ளம், பக்தி, பாசத்துடன் வைக்கப்பட்டதல்ல. பயத்தில் வைக்கப்பட்டவை.
குண்டர்களுக்கு தலைமை தாங்குபவருக்கு டிஜிபியும், தலைமைச் செயலரும் வணக்கம் செய்கின்றனர் என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications