டெல்லியில் குடியரசு தின விழா கோலாகல ஊர்வலம்

Subscribe to Oneindia Tamil

Republic Day

டெல்லி: 59வது குடியரசு தினத்தையொட்டி டெல்லியில் இன்று கண்கவர் பிரமாண்ட அணிவகுப்பு நடந்தது. இந்தியாவின் படை பலம், கலாச்சாரம் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் வகையில், அணிவகுப்பு நடந்தது.

டெல்லி ராஜ்பாத்தில் நடந்த இந்த பிரமாண்ட அணிவகுப்புக்கு டெல்லி பாரந்திய கமாண்டிங் ஆபிசர் மேஜர் ஜெனரல் கே.ஜே.எஸ். ஓபராய் தலைமை தாங்கிச் சென்றார்.

ராணுவத்தின் உயரிய விருதான பரம் வீர் சக்ரா வாங்கிய 12க்கும் மேற்பட்ட பதவியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகள் முதலில் அணிவகுத்துச் சென்றனர்.

அவர்களது அணிவகுப்பை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் சல்யூட் அடித்து ஏற்றுக் கொண்டார்.

இதையடுத்து ராணுவ வீரர்கள் மிடுக்குடன் அணிவகுத்து வந்தனர். முதலில் காலாட்படை வீரர்களும், தொடர்ந்து டேங்குகளின் அணிவகுப்பும் வந்தது.

அதி நவீன டி-90 பீஷ்மர் டேங்குகள், பாலம் காட்ட உதவும் டேங்குகள், 155 எம்எம் சோல்டம் ஹோவிட்சர்ஸ், பலமுனை தாக்குதல் ராக்கெட் வாகனம், பிரம்மோஸ் ஏவுகணை, துங்குஷ்கா விமான பாதுகாப்பு கன் சிஸ்டம், சர்வத்ரா பாலம், மொபைல் நெட்ஒர்க் இணைப்பு மையம் உள்ளிட்டவை அணிவகுப்பில் இடம் பெற்றிருந்தன.

பஞ்சாப் ரெஜிமென்ட், கிரெனடியன் பிரிவு, ராஜ்புதனா துப்பாக்கிப் படை, சிக் லைட் இன்பேன்ட்ரி பிரிவு, அஸ்ஸாம் ரெஜிமென்ட், மஹர் ரெஜிமென்ட், 8 கூர்க்கா ரைபிள்ஸ் பிரிவு உள்ளிட்டவற்றைச் சேர்ந்த வீரர்களும் தொடர்ந்து அணிவகுத்து வந்தனர்.

இவர்களைத் தொடர்ந்து துருவ் அட்வான்ஸ்ட் லைட் ஹெலிகாப்டர் படைப் பிரிவைச் சேர்ந்த வீரர்கள் பறந்து வந்து அணிவகுப்புக்கு அழகூட்டினர்.

இன்றைய ராணுவ அணிவகுப்பில் பிரம்மோஸ், தனுஷ் ஏவுகணை, அக்னி 3 ஏவுகணை ஆகியவை அனைவரையும் கவர்ந்த முக்கிய அம்சங்களாக இடம் பெற்றிருந்தன.

அணிவகுப்பில் எல்லைப் பாதுகாப்புப் படை, கடலோரக் காவல் படை, இந்தோ - திபெத் எல்லைப் போலீஸ், மத்திய ரிசர்வ் போலீஸ் படை, மத்திய தொழிலக பாதுகாப்புப் படை, ரயில்வே பாதுகாப்புப் படை, டெல்லி போலீஸ், என்சிசி, என்எஸ்எஸ் உள்ளிட்ட பல்வேறு பிரிவினரும் அணிவகுத்து வந்தனர்.

இதுதவிர 26 மாநிலங்கள், மத்திய அமைச்சகங்கள், பல்வேறு துறைகளின் ரத அணிவகுப்பும் இந்த குடியரசு தின விழா ஊர்வலத்தில் இடம் பெற்றுள்ளது.

அணிவகுப்பில் குடியரசுத் தலைவரின் வீர விருது பெற்ற 22 குழந்தைகளில் 18 பேர் அலங்கரிக்கப்பட்ட யானைகளில் அணிவகுத்து வந்தது கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. இவர்களில் 4 குழந்தைகளுக்கு மரணத்திற்குப் பின்னர் இந்த விருது கிடைத்துள்ளது.

அணிவகுப்பின் முக்கிய அம்சமாக 1400 சிறுவர், சிறுமியர் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது. அவர்களின் நடனம் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

எல்லைப் பாதுகாப்புப் படையினரின் ஜான்பாஸ் என்ற மோட்டார் சைக்கிள் சாகச நிகழ்ச்சியும் குடியரசு தின விழா அணிவகுப்பில் எழிலூட்டியது. மொத்தம் 178 வீரர்கள், 34 பைக்குகளில் வந்து செய்த சாகச சண்டைக் காட்சிகள் பார்ப்போரை மெய் சிலிர்க்க வைத்தன.

முன்னதாக இந்தியா கேட் பகுதியிலிருந்து குடியரசு தின விழா அணிவகுப்பு தொடங்கியது.

அங்குள்ள அமர் ஜவான் ஜோதி நினைவிடத்தில் பிரதமர் மன்மோகன் சிங் முப்படை தளபதிகள் சூழ மலர் வளையம் வைத்து நாட்டுக்காக உயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

அதன் பின்னர் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், இந்த ஆண்டு குடியரசுத் தின விழா சிறப்பு விருந்தினரான பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸி ஆகியோர் விழா மேடைக்கு அழைத்து வரப்பட்டனர்.

இதையடுத்து மூவண்ணக் கொடியை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் ஏற்றி வைத்து சல்யூட் செய்தார்.

அதன் பின்னர் உயரிய வீர விருதான அசோக் சக்ரா விருதினை மேஜர் திணேஷ் ரகுராமன், கேப்டன் ஹர்ஷன், நயீப்சுபேதார் சன்னிலால், கர்னல் வசந்த் வேணுகோபால் ஆகியோருக்கு வழங்கினார்.

இந்த விருது மரணத்திற்குப் பின்பு வழங்கப்பட்டது. சென்னையைச் சேர்ந்த ரகுராமன் சார்பில் அவரது தந்தை கேப்டன் கிருஷ்ணமூர்த்தியும், வசந்த் சார்பில் அவரது மனைவி சுபாஷினியும், ஹர்ஷன் சார்பில் அவரது தந்தை ராதாகிருஷ்ணன் நாயரும், சன்னிலால் சார்பில் அவரது மனைவி சிந்தா தேவியும் விருதினைப் பெற்றுக் கொண்டனர்.

விமானங்கள், ரயில் போக்குவரத்துக்குத் தடை:

குடியரசு தினவிழா அணிவகுப்பு முடியும் வரை டெல்லியில் வாகன போக்குவரத்து, மெட்ரோ ரயில் சேவை, விமான சேவை ஆகிய அனைத்து மதியம் 1-30 மணி வரை பாதுகாப்புக் கருதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்க டெல்லி முழுவதும் 20,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+