விஜயகாந்த் மீது எம்ஜிஆர் மருமகன் பாய்ச்சல்!
சென்னை: தன்னுடைய அரசியல் லாபத்திற்காக மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் பெயரை தேமுதிக தலைவர் விஜயகாந்த் பயன்படுத்தக் கூடாது என எம்.ஜி.ஆரின் மருமகன் விஜயகுமார் கூறியுள்ளார்.
இத்தனை காலமாக எங்கிருந்தார் என்றே தெரியாத விஜய்குமார் சமீபத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ராமாவரம் தோட்டத்துக்கு சென்று வந்த நிலையில் இப்போது திடீரென வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
எம்.ஜி.ஆருடன் எந்தத் தொடர்போ, சம்பந்தமோ இல்லாத நடிகர் விஜயகாந்தின் போக்கிற்கு டாக்டர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் மருமகன் என்ற வகையில் கடும் கண்டனம் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.
பேனர்களிலும், விளம்பரங்களிலும் அவரது கட்சித் தொண்டர்கள் மூலமாக கருப்பு எம்.ஜி.ஆர். என்ற வார்த்தை விளம்பரப்படுத்தப்பட்டதே தவிர, பொதுமக்கள் எவரும் விஜயகாந்தை கருப்பு எம்.ஜி.ஆர். என்று அழைத்ததில்லை.
அது மட்டுமின்றி எம்.ஜி.ஆர். வாழ்ந்த காலத்தில் அவருடன் எந்தவித தொடர்பும் இன்றி எதிர்முகாமில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு முகவரி பெற்றுவிட்டு தற்போது எம்.ஜி.ஆர். பெயரை தன் சுயலாபத்திற்காக பயன்படுத்துவது முதல்வராக விரும்பும் ஒரு அரசியல் கட்சித் தலைவருக்கு அழகல்ல.
இறுதிவரை அரசியலிலும், ஆட்சியிலும் தன் உறவினர்கள் யாரையும் நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபட அனுமதிக்காத எம்.ஜி.ஆர். எங்கே. எடுத்த எடுப்பிலேயே தனது கட்சியின் இணைத் தலைவராக தனது மனைவியையும், கட்சிப் பொறுப்பில் தனது மைத்துனரையும் (சுதீஷ்) முன்னிறுத்தி, பங்கேற்ற முதல் தேர்தலிலேயே வேட்பாளராகவும் நிறுத்தி தன் சுயரூபத்தைத் தெளிவாக்கிய விஜயகாந்த் எங்கே.
எம்.ஜி.ஆர். உயிருடன் இருந்தபோதெல்லாம் அவரை மதிக்கத் தவறிவிட்டு அவருக்கு எதிராக எதிரணியில் தன்னை வளர்த்துக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருந்த விஜயகாந்த்.
எம்.ஜி.ஆர். மறைந்து 15 ஆண்டுகள் கழித்து 2002ம் ஆண்டு பிரச்சார வேனை அரசியலுக்காக பயன்படுத்த முனைந்து, 2005ம் ஆண்டு கட்சி தொடங்கியபோது அதே பிரச்சார வேனில் ஏறி நின்று எம்.ஜி.ஆர். வேஷம் போட முயன்று,
தன்னுடைய சுய விளம்பரத்திற்காக, தனது அரசியல் பிரவேசத்திற்காக ஜானகி அம்மையாரின் பெயரை தேவையில்லாமல் இழுத்ததை ஏற்கனவே பல்வேறு சமயங்களில் கண்டித்திருக்கிறேன்.
இனிமேலும் எம்.ஜி.ஆர். பெயரையோ, ஜானகி அம்மையார் பெயரையோ தவறாக பயன்படுத்துவதை விடுத்து அதிமுகவிற்கு சொந்தமான பிரச்சார வாகனத்தை அக்கட்சியிடம் உடனே ஒப்படைத்துவிட்டு அரசியல் நாகரீகம் காப்பதே தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்துக்கு அழகு என்பதை அறிவுறுத்த கடமைப்பட்டுள்ளேன்.
நல்மனம் கொண்டோர் எம்.ஜி.ஆரின் திருப்பெயரை உச்சரிப்பதிலேயும், அவர் வழி நடப்பதிலேயும் தான் எம்.ஜி.ஆருக்குப் பெருமை. ஆனால் எம்.ஜி.ஆருடன் எந்த தொடர்பும் இல்லாமல் அவருடைய நல்மனமும், நல்வழியும் எந்த வகையிலும் பெறாதவர்கள் அவர் தம் கொள்கை கோட்பாடுகளுக்கு விரோதமானவர்கள்.
தங்கள் அரசியல் பிரவேசத்திற்கும் ஆட்சி அதிகார ஆசைகளுக்கும் எம்.ஜி.ஆரின் பெயரை பயன்படுத்துவது ஏற்றுக் கொள்ள தகாதது மட்டுமல்ல, வன்மையான கண்டிக்கத்தக்கதாகும்.
தான் அரும்பாடுபட்டு நிறுவிய அதிமுகவை கட்டிக் காத்திட லட்சோப லட்சம் தொண்டர்களை விட்டுச் சென்றிருக்கிறார் எம்ஜிஆர். தனது உயிலில் கூட சத்யா ஸ்டூடியோ சொத்தை அதிமுகவுக்கே எழுதி வைத்துள்ளார்.
அத்தகைய இயக்கத்தை அழிக்க நினைப்போரும், சுயலாபத்திற்காக அடகு வைக்க முயல்வோரும் சந்தடி சாக்கில் திறந்து கிடக்கும் வீடென்று நினைத்து உள்ளே நுழைய முனைவோரும் எம்.ஜி.ஆரின் எதிரிகள் ஆவர் என்று கூறியுள்ளார் விஜய்குமார்.












Click it and Unblock the Notifications