திமுக-அதிமுக இருக்கும்வரை உருப்படாது: விஜய்காந்த்
சென்னை: அதிமுக, திமுக இந்த இரண்டு கட்சிகள் இருக்கும் வரை நாடு நன்றாக இருக்காது என தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த்.
சென்னையில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் 200 போதகர்கள் விஜயகாந்த் முன்னிலையில் தேமுதிகவில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியில் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் விஜயகாந்த் பேசுகையில், எனது தொகுதியை பற்றி மற்றவர்கள் சட்டசபையில் என்ன கூறினாலும் எனக்கு கவலையில்லை. நான் என் தொகுதிக்கு என்னென்ன செய்துள்ளேன் என்பது அங்குள்ள மக்களுக்கு தெரியும்.
எனது தொகுதியில் அரசுக் கல்லூரி வேண்டுமென்று பலமுறை அமைச்சர் பொன்முடியிடம் மனு செய்துள்ளேன். அவர் பொய் சொல்கிறார். காலேஜ் வேண்டுமென்றால் 10 ஏக்கர் நிலம், ஒரு கோடி நிதி கொடுக்கிறவர்கள் இருந்தால் பேசு என்கிறார்கள். இதற்கு ஏன் நான் இவர்களை கேட்க வேண்டும். நானே செய்து விட மாட்டேனா?.
எனது தொகுதியில் நான் ஏதாவது விழாவில் கலந்து கொண்டாலும் அதில் மாவட்ட கலெக்டரே புறக்கணிப்பு செய்கிறார். அவரிடம் தேதி கேட்டு நடந்த விழா நிகழ்ச்சியிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது.
தமிழக சட்டசபையில் தற்போது நடந்து வருவது நாகரீகமில்லாத செயலாக இருக்கிறது. மக்கள் பிரச்சனையை பற்றித்தான் பேச வேண்டுமே தவிர ஒருவருடைய பட்டங்கள் பற்றியும், பதவிகள் பற்றியும் பேசக் கூடாது.
40 வருடம் கட்சி நடத்துகிறோம் என்கிறார்கள். ஆனால் நான், நீ என்று மரியாதை குறைவாக சபையில் பேசலாமா? இவ்வாறு பேசுவதால் இளைய தலைமுறைகளுக்கு சட்டசபை இப்படித்தான் இருக்குமோ என்று எண்ணத் தோன்றும்.
சென்னை மாநகராட்சி தெருவில் எச்சில் துப்பினால், அசுத்தம் செய்தால், குப்பை கொட்டினால் அபராதம் என்று கூறியிருக்கிறார்கள். முதலில் மக்களை பழக்க வேண்டும்.
எச்சில் துப்புகிறார்கள் என்றால் ஒவ்வொரு இடங்களிலும் எச்சில் துப்புவதற்கு என்று ஏதாவது ஒரு ஏற்பாட்டை செய்ய வேண்டும். அசுத்தம் செய்கிறார்கள் என்றால் அதன் அருகே கழிவறை இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். இல்லையென்றால் கழிவறை கட்டித் தர வேண்டும்.
சென்னையில் நடைபாதை இருந்தும் பொதுமக்கள் நடக்க முடியாமல் இருக்கிறது. நடைப்பாதை முழுவதும் இரு சக்கர வாகனங்கள்தான் வரிசையாக நிறுத்தப்படுகின்றன.
முதலில் மக்களுக்கு வசதி ஏற்படுத்தி கொடுத்து விட்டு அப்புறம் அபராதத்தை வாங்குங்கள். அவ்வாறு செய்யாமல் இருக்கும்பட்சத்தில் உங்களிடம் (மாநகராட்சி) ஏன் அபராதம் வாங்கக் கூடாது.
தேமுதிக தேர்தலுக்கு எப்போதும் தயாராக இருக்கிறது. நாளை கூட எம்.பி. தேர்தல் வந்தால் தயாராக இருக்கிறோம். அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் தமிழகத்தில் 2011ல் என்று கூறி வருகிறார்கள்.
நான் எந்த நேரத்திலும் 2011 என்று கூறவில்லை. ஏனென்றால் அதற்கு முன்பே தேர்தல் வர வாய்ப்பு உள்ளது. அதில் நாங்கள் வெற்றி பெறுவது உறுதி. மக்கள் எங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள்.
நான் ஆட்சிக்கு வந்தால் கண்டிப்பாக லஞ்சத்தை ஒழிப்பேன். அதில் உறுதியாக இருக்கிறேன். ஏனென்றால் நான் வாங்கினால்தானே மற்றவர்கள் வாங்க போகிறார்கள். நான் வாங்க மாட்டேன்.
பழைய மாமல்லபுரம் சாலை (ராஜீவ் காந்தி சாலை) பணிகள் மிக மோசமான முறையில் நடந்து வருகிறது. பல வருடங்களாக நடக்கும் வேலை எப்போது முடியும் என்று தெரியவில்லை. அந்த வழியாக அதிக வாகனங்கள் செல்வதால் தூசு படலம்தான் உள்ளது.
சாலையில் தண்ணீர் கூட தெளிக்காமல் இருப்பதால் இந்த தூசியால் அப்பகுதி மக்கள் நோயாளிகளாக மாறும் நிலை உருவாகி உள்ளது.
ஒருவேளை முன்னாள் முதலமைச்சரின் வீடு அந்த பகுதியில் இருப்பதால் இவ்வாறு பணி நடைபெறுகிறதா?. எப்போது அந்த பணி முடியும் என்றே தெரியவில்லை.
அதிமுக, திமுக இந்த இரண்டு கட்சிகள் இருக்கும் வரை நாடு நன்றாக இருக்காது. அரசு நடத்தவிருக்கும் கேபிள் டிவி ஆளும் கட்சிக்குத்தான் போக போகிறது என்று நான் ஏற்கனவே சொன்னேன். இப்பொழுது அது படிப்படியாக அரங்கேறி வருகிறது என்றார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications