அண்ணா நினைவு நாள்: கருணாநிதி, தலைவர்கள் அஞ்சலி
சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 39வது நினைவு நாளையொட்டி முதல்வர் கருணாநிதி உட்பட ஏராளமான தலைவர்கள் மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
சென்னை சேப்பாக்கத்தில் இருந்து இன்று காலை முதல்வர் கருணாநிதி தலைமையில் திமுக எம்பிக்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் அண்ணா நினைவிடத்துக்கு காலை 8 மணிக்கு பேரணியாக சென்றனர்.
பின்னர் அண்ணா சமாதியில் முதல்வர் மலர் வளையம் வைத்து மவுன அஞ்சலி செலுத்தினார். எம்பிக்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என அனைவரும் தொடர்ந்து மரியாதை செலுத்தினர்.
ஜெ. வரவில்லை:
அதிமுக சார்பில் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அதிமுக எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.
நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த ஜெயலலிதா வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜெயலலிதா வரவில்லை.
விஜயகாந்த், சரத்குமார் அஞ்சலி:
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோயம்பேட்டில் தனது கட்சி தலைமை கழகத்தில் உள்ள அண்ணா உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
அகில இந்திய சமுத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், தனது கட்சியினருடன் அண்ணா நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.
எம்.ஜி.ஆர்.கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன், ஜனநாயக முன்னேற்ற கழகத் தலைவர் ஜெகத் ரட்சகன், பாஜக நிர்வாகிகள், காங்கிரஸ் நிர்வாகிகள், திராவிடக் கழகத் தலைவர் கி.வீரமணி உட்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் அண்ணா நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.


Click it and Unblock the Notifications
