அமிதாப் வீட்டில் பாட்டில் வீச்சு
மும்பை: பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் வீடு இன்று அதிகாலை தாக்கப்பட்டது. மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள், வீட்டின் மீது கண்ணாடி பாட்டில்களை வீசித் தாக்கி விட்டு ஓடி விட்டனர். இதனால் மும்பையில் மேலும் பரபரப்பு அதிகரித்துள்ளது.
சிவசேனை கட்சியிலிருந்து பிரிந்து சென்று மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா என்ற கட்சியைச் தொடங்கிய பால் தாக்கரேவின் மருமகன் ராஜ் தாக்கரே, சமீபத்தில் அமிதாப் பச்சனை கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந் நிலையில் ராஜ் தாக்கரேவின் ஆதரவாளர்கள், மும்பையில் வசிக்கும் உ.பி., பீகார் மாநிலத்தவர் மீது தாக்குதலைத் தொடங்கியுள்ளனர். இதனால் மும்பையில் பதட்டம் நிலவுகிறது. தானே, நாசிக்கிலும் வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளன.
இந் நிலையில் இன்று அதிகாலை அமிதாப் பச்சனின் வீட்டின் மீது கண்ணாடி பாட்டில்களை வீசித் தாக்குதல் நடைபெற்றது.
இன்று அதிகாலை 1.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் இரண்டு பேர் ஜூஹு பகுதியில் உள்ள அமிதாப்பின் பிரதீக்ஷா வீட்டுக்கு வந்தனர். நேற்று வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து அமிதாப் வீடு உள்ள பகுதியில் டிவி நிருபர்கள், கேமராக்கள் சகிதம் குழுமியிருந்தனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களில் ஒருவர் 3 கண்ணாடி பாட்டில்களை எடுத்து அமிதாப் வீட்டை நோக்கி எறிந்தார். பின்னர் அவர்கள் இருவரும் ஓடி விட்டனர்.
இந்த சமயத்தின்போது வீட்டுக்கு வெளியே ஒரு போலீஸ்காரர் கூட இல்லை. வெடிகுண்டே வீசப்பட்டிருந்தாலும் கூட அதை யாராலும் தடுத்திருக்க முடியாது. அந்த அளவுக்கு அமிதாப் வீட்டுக்கு மகா மோசமான பாதுகாப்பு தரப்பட்டிருந்தது.
ஆனால் இந்த சம்பவத்தை போலீஸார் மறுத்துள்ளனர். அப்படி எதுவும் நடக்கவில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர். இருப்பினும் கண்ணாடி பாட்டில்கள் வீசப்பட்டதை டிவி கேமராக்கள் படு அழகாக காட்டுகின்றன.












Click it and Unblock the Notifications