சோயிப் மாலிக் கல்யாணத்தில் புது திருப்பம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் சோயிப் மாலிக். இவர் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஆயிஷா சித்திக் என்பவரை காதலித்து வந்தார். 2005ம் ஆண்டு பாகிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்தது. அப்போது பாகிஸ்தான் வீரர்களுக்கு ஆயிஷா வீட்டில் விருந்து அளிக்கப்பட்டது.
இருவருக்கும் விரைவில் கல்யாணம் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் சமீபத்தில் மாலிக் கூறுகையில் இரு குடும்பத்தினர் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் தனக்கும், ஆயிஷாவுக்கும் திருமணம் நடைபெறாது எனவும் தெரிவித்தார்.
ஆனால் இதை ஆயிஷாவின் தந்தை அகமது சித்திக் மறுத்துள்ளார். 2002ம் ஆண்டே ஆயிஷாவுக்கும், மாலிக்குக்கும் டெலிபோன் மூலம் திருமணம் முடிந்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், சோயிப் மாலிக் தனது மகளை 2002-ம் ஆண்டு டெலிபோன் மூலம் திருமணம் செய்தார். இதற்கு ஆதாரம் இருக்கிறது. தற்போது அவரிடம் இருந்து எனது மகளுக்கு விவாகரத்து கேட்டு இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.
அதேபோல மாலிக் மீது ஆயிஷாவும் பாய்ந்துள்ளார். சரமாரியாக பல்வேறு புகார்களை அடுக்கியுள்ளார். ஆயஷா இதுகுறித்துக் கூறுகையில், சோயிப் மாலிக் மீது நான் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தேன். அவருடன் இருந்த புனித உறவை அங்கீகரிக்க மறுத்து விட்டது துரதிருஷ்ட வசமானது. அவர் எனக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டார்.
அவரை நான் வெறுக்கிறேன். அவரைப் பார்க்கக் கூட விரும்பவில்லை. அவருடன் செய்த திருமணத்தை நீட்டிக்க விரும்பவில்லை. பாகிஸ்தான் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்ற பிறகு அவர் என்னை தவிர்த்தார்.
தனது டெலிபோன் நம்பரை கூட மாற்றி விட்டார். என்னுடன் வாழ விரும்பவில்லை என்று சொல்லி இருந்தால் நானே அவரிடம் இருந்து விலகி இருப்பேன்.
சோயிப் மாலிக்கை திருமணம் செய்து கொள்ள எனது தந்தை முதலில் விரும்பவில்லை. நான் பாகிஸ்தான் செல்வது அவருக்கு பிடிக்கவில்லை. எனது தந்தையை மாலிக்தான் சமரசப்படுத்தினார். திருமணத்திற்கு பிறகு இங்கிலாந்து சென்று விடுவோம் என்றார்.
எங்களது குடும்பம் தீவிர மதபாகுபாடு உள்ள குடும்பமாகும். திருமண புனித உறவை நான் முழுமையாக நம்புகிறேன்.
எனது எதிர்காலம் குறித்தோ, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தோ நான் சிந்திக்கவில்லை என்றார் ஆயிஷா.












Click it and Unblock the Notifications