மகாராஷ்டிராவில் உ.பி., பீகார் மாநிலத்தவர்கள் மீது தாக்குதல்

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிர நவநிர்மான் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரேவின் ஆதரவாளர்கள், மும்பையில் வசிக்கும் உ.பி., பீகார் மாநிலத்தவர்கள் மீது தாக்குதலைத் தொடங்கியுள்ளனர். இதனால் மும்பையில் பதட்டம் நிலவுகிறது. தானே, நாசிக்கிலும் வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளன.

சிவசேனை கட்சியிலிருந்து பிரிந்து சென்று மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா என்ற கட்சியைச் தொடங்கிய பால் தாக்கரேவின் மருமகன் ராஜ் தாக்கரே, சமீபத்தில் அமிதாப் பச்சனை கடுமையாக விமர்சித்திருந்தார்.

வாழ்ந்து கொண்டிருக்கும் மாநிலமான மகாராஷ்டிராவை விட சொந்த மாநிலமான உ.பி. மீதுதான் அமிதாப் பச்சனுக்கு பாசம் அதிகமாக இருக்கிறது. அங்குதான் அதிக முதலீடுகளைச் செய்கிறார் என்று அவர் கூறியிருந்தார்.

இதற்கு சமாஜ்வாடிக் கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சனும் பதிலடி கொடுத்துப் பேசியிருந்தார். ஜெயா பச்சன் இதுகுறித்துக் கூறுகையில், எங்களுக்கும் சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே குடும்பத்திற்கும் இடையிலான நட்பு மிகப் பழமையானது. எங்களுக்கு பால் தாக்கரே மற்றும் அவரது குடும்பத்தினரைத் தவிர வேறு எந்த தாக்கரேவையும் தெரியாது.

பால் தாக்கரே எங்களுக்குத் தந்தை போன்றவர். அவரை மட்டுமே எங்களுக்குத் தெரியும்.

ராஜ் தாக்கரே, கோகினூர் ஆலைக்குச் சொந்தமான நிலத்தை வாங்கியுள்ளார். அதில் ஒரு பகுதியை எங்களுக்கு அவர் கொடுத்தால், அங்கும் எங்களது மருமகள் ஐஸ்வர்யா பெயரில் ஒரு பள்ளிக்கூடத்தைக் கட்ட நாங்கள் தயார் என்று கூறியுள்ளார் ஜெயா பச்சன்.

சமீபத்தில் உ.பி. மாநிலத்தில் தனது மருமகள் ஐஸ்வர்யா பெயரில் மகளிர் கல்லூரி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவை நடத்தினார் அமிதாப். இதையடுத்தே அவர் மீது பாய்ந்தார் ராஜ் என்பது நினைவிருக்கலாம்.

வன்முறை வெடித்தது:

இந்த நிலையில் ஜெயா பச்சனின் பேச்சைத் தொடர்ந்து மும்பையில் நேற்று வன்முறை வெடித்தது.

உ.பி. மற்றும் பீகார் மாநிலங்களைச் சேர்ந்த டாக்சி டிரைவர்கள், ஆட்டோ டிரைவர்கள், தள்ளு வண்டி வியாபாரிகளைக் குறி வைத்து ராஜ் தாக்கரேவின் கட்சியினர் வெறித் தாக்குதல் நடத்தினர். மேலும், சமாஜ்வாடிக் கட்சியினரையும், ராஜ் தாக்கரே ஆதரவாளர்கள் தாக்கினர்.

தாதர் பகுதியில்தான் அதிகம் பேர் தாக்கப்பட்டனர். வட இந்திய டாக்சி டிரைவர்களை தேடித் தேடி ராஜ் தாக்கரே கட்சியினர் வெறித்தனமாக தாக்கினர்.

இதேபோல தானே, நாசிக்கிலும் வன்முறை வெடித்தது. தானேவில் உள்ள பிரதாப் டாக்கீஸ் தியேட்டருக்குள் புகுந்த ராஜ் தாக்கரே ஆதரவாளர்கள் அங்கு ஓடிக் கொண்டிருந்த போஜ்பூரி மொழிப் படத்தை தடுத்து நிறுத்தினர். தியேட்டரையும் அடித்து நொறுக்கி சூறையாடினர்.

முலாயம், லாலு எச்சரிக்கை:

மகாராஷ்டிராவில் வட இந்தியர்களைக் குறி வைத்து நடந்திருக்கும் இந்தத் தாக்குதலுக்கு முன்னாள் உ.பி. முதல்வர் முலாயம் சிங் யாதவ், ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மகாராஷ்டிர அரசு உடனடியாக தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் மகாராஷ்டிர அரசு கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என முலாயம் சிங் யாதவ் எச்சரித்துள்ளார். லாலுவும் இதேபோல எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கிடையே, வன்முறையை கடுமையாக கண்டித்துள்ள மகாராஷ்டிர முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக், பிற மாநிலத்தவர் மீது தாக்குதல் நடத்துவதை பொறுத்துக் கொள்ள முடியாது. தாக்குதலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

மாநிலம் முழுவதும் போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து மாநில அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

முன்பு பால் தாக்கரேவின் சிவ சேனைக் கட்சியினர் தமிழர்களைக் குறி வைத்து தாக்கினர். இப்போது மருமகன் ராஜ் தாக்கரே கட்சியினர், உ.பி., பீகார் மாநிலத்தவர்களைத் தாக்கியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+