இல்லாததை பேசியதாக கருணாநிதி கூறுவது வருத்தம் தருகிறது- கிருஷ்ணசாமி
சென்னை: நாங்கள் பேசாத ஒன்றை பேசியதாக கூறி முதல்வர் கருணாநிதி விமர்சித்திருப்பது மிகவும் வருத்தத்திற்குரியது என தமிழக காங்கிரஸ் தலைவர் எம்.கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகள் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியினர் தமிழக அரசு மீது வீண் பழி போடுவதாகவும், ஆட்சியைக் கவிழ்க்க சதி நடப்பதாகவும், ஆட்சி மாற்றத்திற்குத் தான் தயாராக இருப்பதாகவும் முதல்வர் கருணாநிதி நேற்று கூறியிருந்தார்.
முதல்வருக்கு இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி பதிலளித்தார். இதுகுறித்து சத்யமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நாகர்கோயில் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் பேசிய பேச்சு குறித்து முதல்வர் கருணாநிதி நேற்று சில கருத்துகளை தெரிவித்துள்ளார்.
நாகர்கோயில் கூட்டத்தில் நானும் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரமும், இளங்கோவனும், மற்றவர்களும் பேசியது எல்லா பத்திரிகைகளிலும் தெளிவாக வெளியிடப்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசியவர்கள் மீதும், செயல் படுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தான் நாங்கள் பேசினோம். இது காங்கரஸ் கட்சியின் நிலைப்பாடு. இதில் எந்த மாற்றமும் இல்லை.
முதல்வர் அளித்த விளக்கத்தில் அவர் ஆட்சிப் பொறுப்பேற்றதற்குப் பிறகு தமிழகத்தில் விடுதலைப் புலிகள் மற்றும் அவர்களுக்கு துணைபோனவர்கள் என்று எத்தனை பேர் கைது செய்யப் பட்டார்கள் என்றும், எத்தனை வழக்குகள் அவர்கள் மீது போடப் பட்டுள்ளன என்பதை பற்றியும் விவரமான பட்டியலை தெரிவித்தார்.
இந்த நடவடிக்கையை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில்நான் மன நிறைவோடு வரவேற்கிறேன்; பாராட்டுகிறேன். அண்மையில் நான் விடுதலைப் புலிகள் தொடர்பான முதலமைச்சருக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தேன்.
அதில்கூட "தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் கூட்டங்கள் நடத்தியும், பேட்டிகள் அளித்தும், காங்கிரஸ் தலைவர்களை கேலி, கிண்டல் செய்தும் சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிற அரசியல் மற்றும் அரசியல் சாரா இயக்கத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று தான் குறிப்பிட்டிருந்தேன்.
ஆனால் நாகர்கோயில் கூட்டத்தில் "தமிழ்நாடு விடுதலைப் புலிகளின் வேட்டைக்காடாக மாறி விட்டது' என்றோ, "விடுதலைப் புலிகளுக்கு கருணாநிதி இங்கு இடம் கொடுத்து விட்டார் என்றோ' யாரும் பேச வில்லை. நாங்கள் பேசாத ஒன்றை பேசியதாகக் கூறி முதலமைச்சர் விமர்சித்திருப்பது வருத்தத்திற்குரியது.
2011ல் காமராஜர் ஆட்சி அமைப்போம் என்பது எங்கள் நிலைப்பாடு. நாங்கள் அரசை பற்றி எந்த விதத்திலும் குறை கூறவில்லை. விடுதலைப்புலிகள் மற்றும் அவர்களை ஆதரிப்பவர்களை பற்றித்தான் குறை கூறுகிறோம்.
சட்டசபையில் ஜெயலலிதா தனிப்பட்ட முறையில் பேசியதற்கு நாங்கள் கருத்து தெரிவிக்க முடியாது.
திருமாவளவனை கைது செய்வது குறித்து நாங்கள் பேசவில்லை. விடுதலைப்புலிகளை ஆதரிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் கிருஷ்ணசாமி.
விடுதலைப் புலிகள் பிரச்சனையில் சட்டசபையில் அதிமுகவுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி மவுனம் சாதித்ததா? என்ற கேள்விக்கு, திமுகவும், அதிமுகவும் ஒருவரை ஒருவர் தனிப்பட்ட முறையில் பேசிக் கொள்ளும் போது காங்கிரஸ் கட்சி என்ன செய்ய முடியும்? என்றார்.
ஆட்சி மாற்றத்திற்கும் தயார் என்று கருணாநிதி பேசியிருக்கிறாரே என்ற கேள்விக்கு, நாங்கள் ஆட்சியில் இல்லை; அவர் தான் ஆட்சியில் இருக்கிறார் என்று பதிலளித்தார் கிருஷ்ணசாமி.
முன்னதாக சத்தியமூர்த்தி பவனில் தென்சென்னை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் மாநிலத் தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் விடுதலைப்புலிகளை தொடர்ந்து ஆதரித்து பேசிவரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனை கைது செய்யக் கோரி தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது












Click it and Unblock the Notifications