கோவை அருகே ரயில் மோதி 3 யானைகள் பலி
கோவை: கோவை அருகே ரயில் மோதி 3 யானைகள் பரிதாபமாக இறந்தன.
கோவை மாவட்டத்தின் பல பகுதிகளில் காட்டு யானைகள் இரவில் காடுகளிலிருந்து வெளியேறி கிராமங்களுக்கு வருவது வழக்கம்.
சமீபத்தில் மதுக்கரை காட்டிலிருந்து ஊருக்குள் வந்த யானைகள் பெரும் அட்டகாசம் செய்தன. இதையடுத்து அவற்றை அதிகாரிகள் காட்டுக்குள் மிரட்டி விட்டனர்.
இந்த நிலையில் மீண்டும் காட்டிலிருந்து கிளம்பிய யானைகள் ஈச்சநாரி -மதுக்கரை இடையிலான குறும்பாளையம் என்ற பகுதியில் சுற்றிக் கொண்டிருந்தன.
இன்று அதிகாலை அப்பகுதி ரயில்வே தண்டவாளப் பகுதியில் யானைகள் கூட்டம் நின்று கொண்டிருந்தது. அப்போது ஈரோடு - பாலக்காடு பாசஞ்சர் ரயில் வந்தது. அந்த ரயிலில் பயணிகள் யாரும் இல்லை.
தண்டவாளத்தின் குறுக்கே யானைகள் நின்றதால் ரயில் டிரைவர் அதிர்ச்சி அடைந்தார். ரயிலை நிறுத்துவதற்குரிய தூரத்திற்குள் யானைகள் இல்லாததால், வேகமாக அவற்றின் மீது மோதியது.
இதில் ரயில் என்ஜினின் ஒரு பகுதி சேதமடைந்தது. இதையடுத்து ரயில் நிறுத்தப்பட்டது.
விபத்தில் 2 ஆண் யானைகள் ஒரு பெண் யானை ஆகியவை சம்பவ இடத்திலேயே இறந்து விட்டன. இதில், பெண் யானை கர்ப்பிணியாக இருந்துள்ளது. விபத்தில் அதன் வயிற்றிலிருந்த குட்டியும் வெளியே வந்து விழுந்து கிடந்தது பார்க்க பரிதாபமாக இருந்தது.
ஒரு யானை படுகாயமடைந்த நிலையில் தப்பி ஓடி காட்டுக்குள் புகுந்தது. காட்டுக்குள் அந்த யானை கதறியபடி உள்ளது. அதன் நிலைமை மோசமடைந்திருக்கும் என அதிகாரிகள் கருதுகின்றனர்.












Click it and Unblock the Notifications