தாயைக் கொல்ல முயன்ற தந்தையை வெட்டிக் கொன்ற மகன்
சென்னை: தனது கண் முன்பாகவே அம்மாவைக் கொல்ல முயன்ற அப்பாவை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தான் மகன்.
சென்னை கே.கே.நகர் ராஜமன்னார் காலனி அரசு குடியிருப்பில் வசிப்பவர் சுப்பிரமணியம் (53). தலைமைச் செயலக மோட்டார் வாகன பிரிவில் பணியாற்றி வந்தார்.
இவருக்கு உஷா (43) என்ற மனைவியும், சுமித்ரா (25) என்ற மகளும், ராமச்சந்திதரன் (17) என்ற மகனும் உள்ளனர். சுமித்ராவுக்கு திருமணமாகி விட்டது. கணவருடன் விஜயராகவபுரம் பகுதியில் வசித்து வருகிறார்.
ராமச்சந்திரன், கேட்டரிங் டெக்னாலஜி படித்து வருகிறார். சுப்ரமணியத்திற்கு குடிப்பழக்கம் இருந்தது. மேலும் தனது மனைவியின் நடத்தை குறித்தும் சந்தேகப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அடிக்கடி உஷாவுடன் சண்டை போடுவது வழக்கமாம்.
இத்தனை வயதுக்குப் பிறகும் தனது நடத்தை குறித்து கணவர் சந்தேகப்படுவது குறித்து வேதனை அடைந்த உஷா, மருமகனிடம் கூறி, மாமனாருக்கு அறிவுரை கூறுமாறு கூறியிருக்கிறார். அவரும் சுப்ரமணியத்திடம் கேட்டுள்ளார்.
இதனால் கோபமடைந்தார் சுப்ரமணியம், மருமகனிடம் கூறி என்னை கேவலப்படுத்தி விட்டாயே என்று கேட்டு நேற்று இரவில் உஷாவிடம் சண்டை போட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் மண்ணெண்ணையை எடுத்து உஷா மீது தீவைக்க முயற்சித்தார் சுப்ரமணியம். அப்பாவும், அம்மாவும் சண்டை போடுவதை வேதனையுடன் பார்த்துக் கொண்டிருந்த ராமச்சந்திரன், தந்தையின் செயலைப் பொறுக்க முடியாமல் கடும் ஆத்திரமடைந்தார்.
தந்தையை தடுக்க முயன்றார். ஆனால் சுப்ரமணியம், மகனைத் தள்ளி விட்டார். இதனால் கோபமடைந்த ராமச்சந்திரன், அருகில் கிடந்த அரிவாளை எடுத்து தந்தையை சரமாரியாக வெட்டித் தள்ளினார். இதில் துடிதுடித்து சுப்ரமணியம் கீழே விழுந்து உயிரிழந்தார்.
பதறிப் போன உஷா, தனது மருமகனுக்கு தகவலைத் தெரிவித்தார். அவர் விரைந்து வந்தார். கே.கே.நகர் போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தார். போலீஸார் விரைந்து வந்து சுப்ரமணியத்தின் உடலைக் கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
ராமச்சந்திரன் கைது செய்யப்பட்டார். மைனர் சிறுவன் என்பதால் சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அவனை போலீஸார் கொண்டு போய் சேர்த்தனர்.
நள்ளிரவில் நடந்த இந்த துயரச் சம்பவத்தால் கே.கே.நகர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications