திருவட்டாரில் அதிகாரிகளை கார் ஏற்றி கொல்ல முயற்சி

குமரி மாவட்டம் திருவட்டார் அருகே வேர்கிளம்பி உடையார் விளை என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் இருந்த நாராயணசாமி கோவிலை அகற்ற கடந்த 6ம் தேதி தேசிய நெடுஞ்சாலை துறை தக்கலை இஞ்சினியர்கள் மற்றும் அதிகாரிகள் உடையார்விளை பகுதிக்கு சென்றனர். ஜேபிசி இயந்திரம் மூலம் கோயிலை இடித்தனர்.
அப்போது மிக வேகமாக அங்கு வந்த கார் அதிகாரிகள் மீது மோதியது. இதில் நெடுஞ்சாலைத் துறை என்ஜீனியர்கள் அந்தோணி சேவியர், சுந்தரம் மற்றும் போலீஸகாரர் எட்வின் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் கோயில் நிர்வாகி அர்ஜூனன் மற்றும் அவரது மகன் செந்தில்குமார் மற்றும் சிலர்தான் கோயிலை இடித்த ஆத்திரத்தில் அதிகாரிகளை கொல்ல முயன்றது தெரிய வந்தது.
இந்நிலையில் உதவி கோட்ட செயற்பொறியாளர் அந்தோணி சேவியரை காரை ஏற்றி கொல்ல முயன்ற பகீர் காட்சிகள் அடங்கிய சிடியை கோட்ட பொறியாளர் சந்திரசேகரன் நேற்று வெளியிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, ஆக்கிரமிப்பு அகற்றுவதை வீடியோவில் பதிவு செய்துள்ளோம். அதில் காரை ஏற்றி கொல்ல முயன்ற காட்சி தத்ரூபமாக படமாக்கப்பட்டுள்ளது. இந்த சிடியை சென்னையில் உள்ள எங்கள் மாநில சங்கம் மூலம் தலைமை பொறியாளருக்கு கொடுக்க உள்ளோம் என்றார்.
அர்ஜூனின் குடும்பத்தினர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
