கைதி மனைவி கற்பழிப்பு, ஆபாச படம் எடுத்த போலீஸ்-கோர்ட் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதியின் மனைவியை சிறைக் காவலர்கள் நான்கு பேர் கற்பழித்ததாக கூறப்படுவது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்யாமல் இருப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சிறைத்துறை கூடுதல் டிஜிபி அளித்த அறிக்கை திருப்தி தரும் வகையில் இல்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வேலூர் சிறையில் 10 ஆண்டு சிறைத் தண்டனையின் கீழ் அடைக்கப்பட்டுள்ளவர் கணேசன். கடந்த நவம்பர் மாதம் 13ம் தேதி சிறைக்கு வந்த அவரது மனைவி நதியா, கணவரை சந்தித்து விட்டு வீடு திரும்பினார்.

அப்போது அவரை வழியில் மிரட்டி, மோட்டார் சைக்கிளில் சிறை வார்டன் மகேந்திரன் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. மகேந்திரன் வீட்டில் வைத்து நதியாவை துணை ஜெயிலர் தமிழ்ச்செல்வன், சிறை வார்டர்கள் பாலமுருகன், மூர்த்தி ஆகியோர் கற்பழித்ததாக கூறப்படுகிறது.

மேலும் இதை ஆபாசப் படமாகவும் எடுத்துள்ளனர். வெளியில் சொல்லக் கூடாது என்றும் மிரட்டியதாக கூறப்படுகிறது.

பொங்கலுக்கு புத்தாடையுடன் வருவதாக கூறிச் சென்ற நதியா, அதன்படி வராததால் குழப்பமடைந்த கணேசன், தனது மனைவி என்ன ஆனார் என்று தெரியவில்லை. அவருக்கு சிறைக் காவலர்களால் ஆபத்து ஏற்பட்டிருக்கலாம். எனவே அவரைக் கண்டுபிடித்துத் தர வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனுவைத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் பி.டி.தினகரன், ஆர்.ரகுபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த விவகாரம் தொடர்பாக வேலூர் மாவட்ட செஷன்ஸ் நீதிபதி சிறைக்கு நேரில் சென்று கணேசனிடம் வாக்குமூலம் பெற வேண்டும் என்றும் அதை உயர்நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்னர். மேலும் சிறைத்துறை கூடுதல் டிஜிபி இதுதொடர்பாக விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் கடந்த 18ம் தேதி உத்தரவிட்டனர்.

அதன்படி இருவரும் விசாரணை மற்றும் பதில் அறிக்கையைத் தாக்கல் செய்தனர். நேற்று வழக்கு நீதிபதிகள் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறைத்துறை கூடுதல் டிஜிபியின் அறிக்கைக்கு நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.

பின்னர் அவர்கள் பிறப்பித்த உத்தரவில், கூடுதல் டி.ஜி.பி. தாக்கல் செய்த அறிக்கை மீது நாங்கள் திருப்தி அடையவில்லை. கூடுதல் டி.ஜி.பி. விசாரணை செய்து அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தோம். ஆனால் அந்த உத்தரவின் முக்கியத்துவத்தை அவர் புரிந்துகொள்ளவில்லை.

ஒரு சிறைக் கைதி தந்த புகாரானது சீருடை பணியாளர்கள் மீது களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இப்படிப்பட்ட புகாரை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. களங்கத்தை நீக்குவது போலீஸ் அதிகாரிகளின் கடமையாகும். இதுபற்றி நாங்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.

கூடுதல் டி.ஜி.பி. நேரில் சென்று விசாரணை செய்து, அறிக்கையை தாக்கல் செய்யும்படி கூறியிருந்தோம். ஆனால், சிறைத்துறை போலீஸ் சூப்பிரண்டு ராஜசவுந்தரியை விசாரணை நடத்த சொல்லி, அவரது அறிக்கையை பெற்று கூடுதல் டி.ஜி.பி. அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.

இந்த அறிக்கை முழுமையாக இல்லை. இந்த அறிக்கையில் நாங்கள் திருப்தி அடையவில்லை.

சிறையில் இருந்த கணவரை பார்த்துவிட்டு வெளியில் திரும்பியபிறகு கற்பழிப்பு சம்பவம் நடந்ததாக புகாரில் கூறப்பட்டுள்ளது. சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. வேலூர் மத்திய சிறைச்சாலைக்கு கடந்த மாதம் 24ம் தேதி ஆய்வு செய்ய சென்றுள்ளார். அப்போது கணேசன் தனது மனைவிக்கு ஏற்பட்ட சம்பவம் குறித்து புகார் கூறியுள்ளார். 4 பேர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.

புகாரை பெற்ற கூடுதல் டி.ஜி.பி. 7 நாட்கள் கழித்து அதிகாரியை நியமித்து துறைரீதியாக விசாரிக்க மட்டும் உத்தரவிட்டுள்ளார். எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. புகாரின் கடுமையை புரிந்துகொள்ளாமல் துறை ரீதியான விசாரணைக்கு மட்டும் உத்தரவிட்டுள்ளார்.

புகார்களுக்கு ஆளான 4 சிறை அதிகாரிகளின் வாக்குமூலம் மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது. வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பெண்ணை ஆஜர்படுத்துமாறு உள்ளூர் போலீசாருக்கு அதிகாரி கடிதம் அனுப்பியுள்ளார்.

நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்த பிறகும், இந்த விஷயத்தில் எந்தவிதமான, கணிசமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. அறிக்கையை பார்க்கும்போது 4 சிறைத்துறை அதிகாரிகளின் விளக்கத்தையும் ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது. இந்த கற்பழிப்பு புகாரில் அதிகம் கவனம் செலுத்தியதாக தெரியவில்லை. பெண் காணாமல் போனதாக மட்டுமே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

எனவே, உள்துறை செயலாளர் டி.ஜி.பி.க்கு தக்க உத்தரவை பிறப்பித்து, எஸ்பி அந்தஸ்துக்கு குறையாத ஒருவரை நியமித்து இந்த புகார் குறித்து விசாரித்து ஒரு வாரத்தில் அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும். சரியான முறையில் குற்றப்பதிவு செய்து வேலூர் தாலுகா போலீசார் விசாரிக்க வேண்டும். இந்த வழக்கு வருகிற 25ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+