
குரங்குகளால் விபத்து: 6 பேர் பலி
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே இன்று காலை குரங்குகள் சரமாரியாக சாலையின் குறுக்கே பாய்ந்ததால், நிலை தடுமாறிய டாடா சுமோ கார் ஒன்று சாலையோர புளியமரத்தில் மோதியதில் அதில் பயணம் செய்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வேலூர் மாவட்டம் சல்லீவன்பேட்டை அருணாசலம் என்பவரின் மகன் பரமசிவம். இவரது மகன் ஹரிகிருஷ்ணாவுக்கு திருவண்ணாமலையில் இன்று நிச்சயதார்த்தம் நடைபெறுவதாக இருந்தது.
இதற்காக பரமசிவம் குடும்பத்தினர் டாட்டா சுமோ காரில் திருவண்ணாமலை புறப்பட்டனர். அதிகாலை கார் மல்லாடி என்ற இடத்தின் அருகே வந்த போது திடீரென சாலையின் குறுக்கே குரங்குகள் குதித்து ஓடின.
இதனால் அதிர்ச்சி அடைந்த கார் டிரைவர், குரங்குகள் மீது மோதி விடாமல் இருக்க காரை திருப்பினார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி, சாலையோரம் இருந்த புளியமரத்தில் மோதியது.
இதில், பரமசிவம் (வயது 50), செல்வராஜ் மகன் இளவரசன், கார் டிரைவர் ஆனந்த்ராஜ் (33), ஜெயக்குமார் மனைவி கலையரசி (40), வேலைக்கார பெண் மணியா (41), இளவரசன் மகன் ஆதித்யா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்தில் மணமகன் ஹரிகிருஷ்ணா காயமடைந்தார். அவரது உயிருக்கு ஆபத்தில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உமா, சங்கர நாராயணன், அகில், தச்சன் உள்ளிட்ட 6 பேர் படுகாயமடைந்தனர்.