தமிழகம்-மார்ச் 26ல் ராஜ்யசபா தேர்தல்
டெல்லி: தமிழகத்தில் காலியாகும் 6 ராஜ்யசபா எம்.பி இடங்களுக்கு மார்ச் 26ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது.
இதுதொடர்பான அறிவிப்பு நேற்று டெல்லியில் வெளியிடப்பட்டது.
ராஜ்யசபா உறுப்பினர்கள் 56 பேரின் பதவிக்காலம் ஏப்ரல் மாதத்துடன் முடிவடைகிறது. இவர்களில் 6 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். 6 பேரின் பதவிக்காலமும் ஏப்ரல் 2ம் தேதியுடன் முடிகிறது.
இவர்களில் தங்கத் தமிழ்ச்செல்வன், சி.பெருமாள், என்.ஜோதி, எஸ்.பி.எம்.சையத் கான் ஆகியோர் அதிமுகவைச் சேர்ந்தவர்கள். ஆர்.சண்முக சுந்தரம் திமுகவைச் சேர்ந்தவர். மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் 6வது நபர் ஆவார்.
6 பேர் உள்பட 56 எம்.பி. பதவிகளுக்கும் மார்ச் 26ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது.
தேர்தல் அறிவிப்பு மார்ச் 8ம் தேதி வெளியிடப்படும். அன்றைய தினமே வேட்பு மனு தாக்கல் தொடங்கும். 15ம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம். 17ம் தேதி மனுக்கள் பரிசீலனை நடைபெறும். 19ம் தேதிக்குள் மனுக்களைத் திரும்பப் பெற வேண்டும்.
மார்ச் 26ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். உடனடியாக ஓட்டுக்கள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.
யாருக்கு, எத்தனை சீட் கிடைக்கும்?:
தமிழகத்தில் ஒரு ராஜ்யசபா எம்.பியைத் தேர்ந்தெடுக்க 34 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை.
தற்போது திமுக கூட்டணிக்கு மொத்தம் 167 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். அதிமுக கூட்டணியில், 66 பேர் உள்ளனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனியாக உள்ளார்.
இந்த எம்.எல்.ஏக்கள் பலத்தின்படி திமுக கூட்டணிக்கு நான்கு எம்.பிக்களைத் தேர்வு செய்ய முடியும். அதிமுக கூட்டணிக்கு ஒரு எம்.பி. கிடைப்பார்.
மீதமுள்ள ஒரு எம்.பி பதவிக்குத்தான் இரு கூட்டணிகளிடமும் போதிய பலம் இல்லை. இரு தரப்பிலும் கட்சி மாறி வாக்களித்தால் மட்டுமே 6வது எம்.பி.யைத் தேர்வு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே 6வது எம்.பிக்காக யார் கட்சி மாறி வாக்களிக்கப் போவது என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.