தமிழகத்துக்கு 9 புதிய ரயில்கள்: பிரதமர், லாலுவுக்கு கருணாநிதி நன்றி கடிதம்

பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
நாடாளுமன்றத்தில் மிகச் சிறப்பான ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வே வரலாற்றில் முதல் முறையாக பயணிகள், சரக்கு ரயில் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் பயணிகளுக்கான வசதிகளும், பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது என் கருத்து. அதற்கு என் பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன்.
நாடு முழுவதும் 63 புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட 6 திட்டங்களும், 9 புதிய வழித்தடங்களும் தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது.
நான் கடந்த 21ம் தேதி தமிழகத்துக்கு தேவையான புதிய ரயில் திட்டங்கள் குறித்து உங்களுக்கு கடிதம் எழுதினேன். அதற்கு உரிய நேரத்தில் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளீர்கள். அதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைத்து திட்டங்களும் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பயன்தரும் வகையில் அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தமிழக மக்கள் சார்பில் தங்களுக்கு மீண்டும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.
லாலுவுக்கும் கடிதம்:
லல்லு பிரசாத் யாதவுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,
வரலாற்று சிறப்பு மிக்க ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள தங்களுக்கு தமிழக மக்களின் சார்பில் எனது பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட நாள் கோரிக்கையான விழுப்புரம்- திண்டுக்கல், இரட்டை ரெயில் பாதை, மதுரை- போடிநாயக்கனூர் அகில ரயில் பாதை ஆகியவை தமிழகத்துக்கு வழங்கப்பட்டுள்ளன.
ஈரோடு-பழனி, சென்னை-புதுச்சேரி- கடலூர், அத்திப்பட்டு-புத்தூர் இடையே புதிய ரயில் பாதைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதே போல திருவள்ளூர்-அரக்கோணம் நான்காவது ரயில் பாதை அமைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கு 6 புதிய திட்டங்கள், 9 புதிய ரயில்கள் ஆகியவை பற்றிய அறிவிப்பும் இந்த பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளது. 4 ரயில் சேவைகள் நீடிக்கப்பட்டிருக்கிறது.
காரைக்குடி-மானாமதுரை, திருவாரூர்-நாகூர், சேலம்-கடலூர், திருச்சி- மானாமதுரை, திருவண்ணாமலை-விழுப்புரம் அகல ரயில் பாதை திட்டங்கள் இந்த ஆண்டு நிறைவு பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்-வேளாங்கண்ணி இடையே புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டம் ஏற்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. காரைக்குடி-ராமநாதபுரம், தூத்துக்குடி-கன்னியாகுமரி, சிதம்பரம்-பெரம்பலூர்-ஆத்தூர், தஞ்சாவூர்-அரியலூர், ஓமலூர்-மேட்டூர் அணை ஆகிய புதிய ரயில் பாதைகள் குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த திட்டங்கள் கிடைக்கவும், தமிழ்நாட்டில் ரயில்வே துறை வளர்ச்சி பெறவும் உறுதுணையாக இருக்கும் இணையமைச்சர் ஆர்.வேலுவையும் பாராட்டுகிறேன்.
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள எல்லா திட்டங்களும் தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றம் அடையச் செய்யும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தமிழக மக்கள் சார்பில் தங்களுக்கு மீண்டும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications