• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

'தயாநிதி': கருணாநிதியுடன் மொய்லி சந்திப்பு!!

By Staff
|

Moly
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், சோனியா காந்தியை சந்தித்துப் பேசியது குறித்து திமுக அதிருப்தி அடைந்துள்ள நிலையில் காங்கிரஸ் மேலிடப் பார்வையாளரான வீரப்ப மொய்லி இன்று அவசரமாக சென்னை வந்து முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார்.

அழகரிக்கும், சன் டிவி குழுமத்திற்கும் இடையே ஏற்பட்ட போரைத் தொடர்ந்து திமுகவின் நட்பு வளையத்திலிந்து விலக்கப்பட்டனர் மாறன் சகோதரர்கள்.

தயாநிதி மாறனின் மத்திய அமைச்சர் பதவியை திமுக தலைமை பறித்தது. அதேசமயம், அவரது எம்.பி. பதவியையும் மட்டும் அப்படியே விட்டு விட்டனர்.

இந்த நிலையில் மத்திய ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது, கேபினட் அமைச்சர்கள் வரிசையில் தயாநிதி மாறன் ஜம்மென்று அமர்ந்திருந்தார். மேலும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைய சந்தித்துப் பேசினார்.

தமிழகத்தில் தனக்கு பாதுகாப்பு இல்லை என்றும், எனவே கருப்புப் பூனைப் படை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சோனியாவிடம் அவர் கூறியதாக தெரிகிறது. மேலும், எஸ்.சி.வி கேபிள் டிவி ஆபரேட்டர்களை திமுகவினர் தூண்டுதலின் பேரில் போலீஸார் கைது செய்து வருவதாகவும் சோனியாவிடம் அவர் புகார் கூறியதாகவும் தெரிகிறது.

இது திமுக மேலிடத்தை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. தயாநிதி மாறனின் செயல் திமுக தலைமைக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுதவிர சமீபத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்துடன், தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் அருண்குமார் சந்தித்துப் பேசியதும் திமுக தலைமைக்கு ஆத்திரத்ைத கிளப்பி விட்டுள்ளது.

இந்த நிலையில் முன்னாள் தமிழக மேலிடப் பொறுப்பாளரான வீரப்ப மொய்லி, இன்று அவசரமாக சென்னைக்கு வந்தார். சோனியா காந்திதான் அவரை அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

சென்னை வந்த அவர் நேராக முதல்வர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்திற்குச் சென்றார். அப்போது கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரதராஜன், டி.கே.ரங்கராஜன் ஆகியோர் முதல்வரை சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தனர்.

பின்னர் மொய்லி, கருணாநிதியை சந்தித்தார். அவருடன் காங்கிரஸ் சார்பில் யாரும் உடன் வரவில்லை. முதல்வர்-மொய்லி சந்திப்பின்போது அமைச்சர் ஆற்காடு வீராசாமி உடன் இருந்தார்.

கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் இந்த சந்திப்பு நீடித்தது. சந்திப்புக்குப் பின்னர் வெளியில் வந்த மொய்லி செய்தியாளர்களிடம் பேசுகையில்,

இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. குறிப்பிட்ட எந்த நோக்கமோ, பிரச்சனையோ இல்லை.

சேது சமுத்திர திட்டத்தை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சிக் கும், திமுகவுக்கும் இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை. பாஜக ஆட்சி காலத்தில் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் தரப்பட்டது. கால்வாய் பாதையும் அப்போதுதான் முடிவு செய்யப்பட்டது. இந்த திட்டத்தை நாங்கள் அறிவித்து செயல்படுத்தி வருகிறோம்.

தற்போது இப்பிரச்சனை உச்சநீதி மன்றத்தில் இருப்பதால் இது குறித்து காங்கிரஸ் வெளிப்படையாக பேச முடியாது. அப்படி பேசினால் உச்சநீதி மன்ற அவமதிப்புக்கு ஆளாக நேரிடும்.

காங்கிரஸ் இத்திட்டத்தைத் தாமதப்படுத்தவில்லை. பிரச்சனை உச்சநீதிமன்றத் தில் இருப்பதால் நீதிமன்றம் சொல்கிறபடி கேட்டு நடக்கிறோம். நேற்று மத்திய அமைச்சரவை கூடி மீண்டும் ஒரு சத்தியபிரமாணம் தாக்கல் செய்ய முடிவெடுத் திருக்கிறோம். இதன் பின் உச்சநீதிமன்றம் என்ன சொல்கிறதோ அதனை ஏற்று நாங்கள் செயல்படுத்துவோம்.

ராஜ்யசபா தேர்தல் குறித்து முதல்வரிடம் எதுவும் பேசவில்லை.

அருண்குமார், விஜயகாந்த்துடன் பேசியது குறித்து நான் கருத்து சொல்ல முடியாது. அவரிடம்தான் கேட்க வேண்டும் என்றார் மொய்லி.

அருண்குமாருக்கு கல்தா?

இதற்கிடையே, தமிழக காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளரான அருண்குமார் விரைவில் அப்பொறுப்பிலிருந்து விசிறி அடிக்கப்படுவார் என கிசுகிசுக்கப்படுகிறது.

முன்பு மொய்லி மேலிடப் பொறுப்பாளராக இருந்தபோது காங்கிரஸ் தலைவர்களை சந்திக்கிறாரோ இல்லையோ, மறக்காமல் முதல்வர் கருணாநிதியை சந்தித்து விடுவார்.

சென்னைக்கு எப்போதெல்லாம் வருகிறாரோ அப்போதெல்லாம் தவறாமல் முதல்வரை சந்திப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.

மேலும், ஆட்சியில் பங்கு கேட்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள் வற்புறுத்தும்போதெல்லாம் அவர்களை அடக்கி வைத்தும் வந்தார். கிட்டத்தட்ட திமுகவுக்கு கோபம் வராத வகையில் காங்கிரஸ்காரர்கள் நடக்கும்படி பார்த்துக் கொண்டார்.

ஆனால் அருண்குமார் பொறுப்பாளர் பொறுப்புக்கு வந்தது முதல் இதுவரை கருணாநிதியை சந்திக்கவில்லை. மேலும், திமுக தரப்புக்கு கோபத்தை ஊட்டக் கூடிய வகையிலான காங்கிரஸ் தலைவர்களின் பேச்சுக்களை கட்டுப்படுத்த அவர் தவறி விட்டதாகவும் திமுக தரப்பு முனுமுனுக்கிறது.

இந்த நிலையில் அருண்குமாரை தூக்கி விட்டு மறுபடியும் வீரப்ப மொய்லியை அப்பொறுப்புக்குக் கொண்டு வரலாமா என்று காங்கிரஸ் மேலிடம் யோசிப்பதாக கூறப்படுகிறது.

தற்போது அருண்குமாருக்கு அவரது சொந்த மாநிலமான ஆந்திராவிலும் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது. எனவே அருண்குமாரின் நாட்கள் எண்ணப்படுவதாக காங்கிரஸ் வட்டாரத்தில் பலமாக பேசப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X