இலங்கை அரசுக்கு எதிர்ப்பு-மனித உரிமை அமைப்பு விலகல்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இலங்கையில், தமிழர் பகுதிகளில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை விசாரிக்க இலங்கை அரசு முழு அளவில் ஒத்துழைக்காததற்கு ஆட்சேபனை தெரிவித்து, முன்னாள் இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.என்.பகவதி தலைமையிலான சர்வதேச மனித உரிமைக் குழு, விசாரணைக் குழுவிலிருந்து விலகி விட்டது.

இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச அளவில் கடும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் அதிகரித்து வந்ததைத் தொடர்ந்து, அதுகுறித்து விசாரிக்க உடலகாமா தலைமையிலான மனித உரிமை கமிஷனை அதிபர் ராஜபக்சே நியமித்தார்.

ஆனால் அந்தக் கமிஷனின் விசாரணையில் பாரபட்சம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து கமிஷனின் விசாரணையை மேற்பார்வையிடவும், உரிய ஆலோசனைகள், தீர்வுகளைச் சொல்லவும் பி.என்.பகவதி தலைமையிலான பல்துறைப் பிரமுகர்கள் அடங்கிய சர்வதேச சுயேச்சை அமைப்பு என்ற மனித உரிமை அமைப்பை, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அதிபர் ராஜபக்சே நியமித்தார்.

பகவதி தலைமையிலான விசாரணை அமைப்பு, திரிகோணமலையில் 17 தமிழ் நிவாரணப் பணியாளர்கள் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம், முன்னாள் அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் படுகொலை உள்ளிட்ட 16 மிகப் பெரிய மனித உரிமை மீறல் வழக்குகளை விசாரித்து வந்தது.

இந்த நிலையில் பகவதி தலைமையிலான அமைப்பு விசாரணையிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், மனித உரிமை மீறல்கள் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதில் இலங்கை அரசுக்கு தைரியம் இல்லை.

மனித உரிமை மீறலில் ஈடுபடுவோரை அடையாளம் காட்டுவோருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் மிரட்டல் விடுக்கப்படுகிறது. அவர்களது உயிர்களுக்கு உத்தரவாதம் இல்லை. குறிப்பாக பாதுகாப்புப் படையினர் குறித்து யாரும் குற்றம் சாட்டவே முடியாத நிலை உள்ளது. மீறி அடையாளம் காட்டினால் அவர்களது உயிர்களுக்கு உத்தரவாதம் கிடையாது.

பொதுமக்கள் சாட்சி சொல்ல முன்வருவதே இல்லை. காரணம், பாதுகாப்புப் படையினரால் ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சம்.

இத்தகைய சூழலில் இந்த விசாரணைக் கமிஷனில் தொடர்ந்து நீடிப்பது என்பது இயலாத காரியம், அர்த்தமற்ற ஒன்று. எனவேதான் விலகும் முடிவுக்கு வந்தோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கு இலங்கை அரசின் அட்டர்னி ஜெனரல் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்வதேச அரங்கில் இலங்கையின் மதிப்பை சீர்குலைக்கும் வகையில் இந்த விசாரணை அமைப்பு ஈடுபட்டு வந்தது.

ஜெனீவாவில், ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் 7வது கூட்டம் நடைபெற்று வரும் நேரம் பார்த்து இப்படி ஒரு முடிவை விசாரணைக் குழு அறிவித்துள்ளது உள்நோக்கத்துடன் கூடியது.

சர்வதேச அளவில் அனைவரும் இலங்கையைக் கண்டிக்க வேண்டும் என்பதே அவர்களது உள்நோக்கம் என்று அவர் கூறியுள்ளார்.

மனித உரிமை கமிஷன் தலைவர் உடலகாமா, பகவதி தலைமையிலான குழுவின் இந்த முடிவு வருத்தத்திற்குரியது என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+