அதிமுக இளைஞர் பாசறைகள் தொடக்கம்
சென்னை: அதிமுகவின் இளைஞர் பாசறை மற்றும் இளம்பெண்கள் பாசறை ஆகியவை இன்று தொடங்கப்பட்டன.
சமீபத்தில் சென்னையில் நடந்த அதிமுக செயற்குழு மற்றும் பொதுக் குழுக் கூட்டத்தில், கட்சிக்குப் புது ரத்தம் பாய்ச்சும் வகையில், இளைஞர் பாசறைகள் மற்றும் இளம் பெண்கள் பாசறைகள் தொடங்கப்படும். 50 லட்சம் இளைஞர்கள், இளம் பெண்கள் கட்சியில் சேர்க்கப்படுவர் என அதன் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்தார்.
அதன்படி இந்த பாசறைகள் இன்று முதல் இயங்கத் தொடங்கின.
வட சென்னை மாவட்ட அதிமுக சார்பில் ஆர்.கே.நகரில் நடந்த நிகழ்ச்சியில் இந்த பாசறைகளை அவைத் தலைவர் மதுசூதனன் தொடங்கி வைத்தார். சேகர்பாபு எம்.எல்.ஏ முன்னிலை வகித்தார். இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண் பாசறை உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டன.
காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் மணப்பாக்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாநில மகளிர் அணிச் செயலாளர் வளர்மதி கலந்து கொண்டு உறுப்பினர் அட்டைகளை வழங்கினார்.
கிழக்கு மாவட்டம் கடப்பேரியில் நடந்த விழாவிலும் வளர்மதி கலந்து கொண்டார்.
திருவள்ளூர் மாவட்டம் வானகரத்தில் நடந்த விழாவில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு உறுப்பினர் அட்டைகளை வழங்கினார்.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில், தலைமை நிலையச் செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டார்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள திம்மரசநாயக்கனூரில் நடந்த விழாவில் கட்சிப் பொருளாளர் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டார்.
சேலம் அம்மாப்பேட்டையில் நடந்த நிகழ்ச்சியில், அமைப்புச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். தர்மபுரியில் நடந்த விழாவில் கொள்கைப் பரப்புச் செயலாளர் தம்பித்துரை பங்கேற்று உறுப்பினர் அட்டைகளை வழங்கினார்.
இதே போல தமிழகம் முழுவதும் இன்று அதிமுக இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை தொடங்கப்பட்டது.