ராஜ்யசபா தேர்தல்: ''கட்சி மாறி ஓட்டு போட முடியாது''
சென்னை: தமிழகத்தில் நடைபெறவுள்ள ராஜ்யசபா தேர்தலில் யாரும் கட்சி மாறி ஓட்டுப் போட முடியாது. எனவே அதுமாதிரியான மோசடி நடைபெறுவதற்கு வாய்ப்பில்லை என்று தமிழக சட்டமன்ற செயலாளரும், ராஜ்யசபா தேர்தல் அதிகாரியுமான செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய செல்வராஜ், ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முதல் தொடங்கியுள்ளது. 15ம் தேதி கடைசி நாள்.
விடுமுறை நாட்கள் தவிர மற்ற நாட்களில் காலை 11 மணியில் இருந்து பிற்பகல் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். தேர்தல் அதிகாரியிடமோ, அல்லது உதவி தேர்தல் அதிகாரியிடமோ வேட்பு மனுவை தாக்கல் செய்யலாம்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி எல்லா மாநிலங்களிலும், சட்டப் பேரவை செயலாளர் அல்லது கூடுதல் செயலாளர் மூலம் தேர்தல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாநில தலைமை தேர்தல் அதிகாரி இதனை கண்காணிப்பார்.
மார்ச். 17-ம் தேதி வேட்புமனுக்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும். எத்தனை பேர் மனுதாக்கல் செய்தனர் என்ற விவரம் 19-ந்தேதி தெரிய வரும்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை 6 பேர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இதற்கு மேல் யாரேனும் வேட்பு மனுதாக்கல் செய்திருந்தால், தேர்தல் நடத்தப்பட வேண்டியிருந்தால், 26-ந்தேதி தேர்தல் நடைபெறும். அன்று மாலை முடிவு அறிவிக்கப்படும்.
மாற்றி ஓட்டுப் போட முடியாது:
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் 2004-ம் ஆண்டு ஒரு திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி ஒரு எம்.எல்.ஏ. தான் சார்ந்த கட்சிக்குதான் ஓட்டு போட்டுள்ளாரா என்ற சந்தேகம் அந்தக் கட்சியின் தேர்தல் ஏஜெண்டுக்கு வந்தால், உடனடியாக சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.வை அழைத்து அவரது வாக்கு சீட்டை காட்டச் சொல்லி பார்க்கலாம். எனவே கட்சி மாறி ஓட்டு போட வாய்ப்பில்லை.
2 வேட்பாளர்கள் சம நிலையில் வாக்குகளைப் பெற்றால், அந்த வேட்பாளர்களுக்கு பதிவாகும் வாக்குகளின் அடிப்படையிலும் அவர்கள் சார்ந்த கட்சியின் அதிகப்படியான ஓட்டுகள் எண்ணிக்கையிலும் முடிவு எடுக்கப்படும்.
சபாநாயகரும் ஒரு எம்.எல்.ஏதான். எனவே அவரும் வாக்களிப்பார்.
என் மீது நம்பிக்கை இல்லை என்று யாரும் சொல்லவில்லை. தேர்தலை சிறப்பாக நடத்த வேண்டும் என விரும்புகிறேன் என்றார் செல்வராஜ்.












Click it and Unblock the Notifications