கிருஸ்துவர்களிடையே ஜாதிக் கலவரம் நடந்த கிராமம்-வெறிச்சோடியது
விழுப்புரம்: உளுந்தூர்பேட்டை அருகே வன்னிய சமூகத்தைச் சேர்ந்த கிருஸ்துவர்களுக்கும் தலித் சமூகத்தைச் சேர்ந்த கிருஸ்துவர்களுக்கும் இடையே ஜாதிக் கலவரம் நடந்த எறையூரில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் ஊரை விட்டு வெளியேறிவிட்டதால் அந்த கிராமமே வெறிச்சோடிக் கிடக்கிறது.
இங்குள்ள புனித ஜெபமாலை அன்னை தேவாலயத்தில் வழிபாடு நடத்தும் போது தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக தலித் மக்கள் குற்றம் சாட்டியதால் இரு தரப்பினருக்கும் இடையே கடந்த 3 மாதமாக பிரச்சனை இருந்து வந்தது.
இந் நிலையில் தலித் சமூக மக்கள் தனியாக ஒரு தேவாலயத்தை நிறுவி, தங்கள் தேவாலயத்தை தனிப் பங்காக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்ததால் பிரச்சனை தீவிரமானது.
இதற்கிடையே நேற்று காலை அங்கு பயங்கர ஜாதிக் கலவரம் வெடித்தது. தலித் காலனி பகுதிக்குள் புகுந்த வன்னியர் சமூகத்தினர் வீடுகள் அடித்து நொறுக்கியதோடு தேவாலயத்தையும் தாக்கினர்.
இதையடுத்து கலவரத்தை அடக்க போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பெரியநாயகம் ( 42), மகிமை ராஜ் (25) ஆகியோர் பலியாயி்னர்.
இந்த சம்பவத்தையடுத்து நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் ஊரைவிட்டு வெளியேறிவிட்டனர். மிச்சமுள்ள குடும்பங்களிலும் போலீசார் கைது செய்யலாம் என்ற அச்சத்தில் ஆண்கள் அனைவரும் ஊரைவிட்டு வெளியேறிவிட்டனர்.
இதனால் ஊரே வெறிச்சோடிப் போயுள்ளது.
தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் விழுப்புரம், பெரம்பலூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் இருந்து ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கி ஏந்திய போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர்.
டி.ஐ.ஜி. வன்னிய பெருமாள் தலைமையிலான படை அங்கு முகாமிட்டுள்ளது. புனித ஜெபமாலை அன்னை ஆலயத்திற்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இது தாசில்தார் கொடுத்துள்ள புகாரில் 2,000 பேர் கலவரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து இதுவரை 19 பேரை கைது செய்துள்ளனர்.
ஊராட்சி மன்றத் தலைவர் ஆரோக்கியதாஸ் கொடுத்த புகாரில், தலித் சமூகத்தினர் உண்ணாவிரதம் இருந்தபோது மேத்யூ, அந்தோணி சாமி உள்ளிட்டோர் மைக் மூலம் ஜாதிக் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக குறிப்பிட்டுள்ளார்.கூறியுள்ளார்.
இதையடுத்து மேத்யூ, அந்தோணி சாமி ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கலவரம் நடந்த பகுதிக்கு அமைச்சர்கள் பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் ஆகியோர் சென்று சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டனர். அன்னை ஆலயத்தின் பாதிரியார் எலியாசிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தனர்.
துப்பாக்கிச் சூடு சம்பவம் விசாரணை நடத்தப்படும் என்று அமைச்சர்கள் உறுதியளித்தனர்.












Click it and Unblock the Notifications