புலிகள் பகுதிகளிலும் ஜனநாயகத்தை பரப்புவோம்-ராஜபக்சே
கொழும்பு: விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளிலும் ஜனநாயகத்தைக் கொண்டு செல்வோம் என்று இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார்.
கொழும்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ராஜபக்சே, வன்னிப் பகுதியில் தீவிரவாதத்தைப் பரப்பி வருவோர், மக்களை அடக்கியாள அனுமதிக்க மாட்டோம்.
கிழக்கில் உள்ள மக்கள் இனியும் வன்னி தீவிரவாதிகளின் பிடியில் சிக்கி அவதிப்பட வேண்டியதில்லை.
கிழக்கு மாகாணம் விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து முழுமையாக விடுபட்டு விட்டது. இதன் காரணமாகவே அங்கு நேர்மையான முறையில் தேர்தலை நடத்த முடிந்தது.
அங்கு நிலவி வந்த துப்பாக்கி கலாச்சாரம் முடிவு கட்டப்பட்டு விட்டது. ஜனநாயக உரிமைகளும், சுதந்திரமும் அங்குள்ள மக்களுக்குக் கிடைத்துள்ளது என்றார் அவர்.
கிழக்கில் உள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. இதில், கருணா தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியும், ஆளுங்கட்சியான சுதந்திரா கட்சியும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. இதில் கருணா கட்சிக்கு பெரும்பாலான இடங்கள் கிடைத்தன.
ஆனால் இந்தத் தேர்தலை முக்கிய தமிழர் கட்சியான தமிழ் தேசிய கட்சியும், முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியும் புறக்கணித்தன என்பது குறிப்பிடத்தக்கது.
புலிகள் வசம் இருந்த கிழக்குப் பகுதியை 8 மாதங்களுக்கு முன்பு இலங்கை ராணுவம் கைப்பற்றியது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications