ஸ்பென்சரில் பயங்கர மோதல்-தீவைப்பு

அண்ணா சாலையின் முக்கிய அடையாளம் ஸ்பென்சர் மால் எனப்படும் வணிக வளாகம். பல அடுக்கு வணிக வளாகமான இங்கு எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். சென்னை மக்களின் முக்கிய சந்திப்பு இடமாகவும் இது விளங்குகிறது. இங்கு ஆயிரக்கணக்கான கடைகள் உள்ளன.
இந்த நிலையில் அங்குள்ள காஷ்மீர் கைவினைப் பொருட்கள் விற்பனை நிலைய ஊழியர்களுக்கும், அருகில் உள்ள சிற்றுண்டி விடுதி ஒன்றின் ஊழியர்களுக்கும் இடையே இன்று திடீரென மோதல் மூண்டது. இரு ஊழியர்களும் கடுமையாக மோதிக் கொண்டனர்.
அப்போது சிற்றுண்டி விடுதிக்கு தீவைக்கப்பட்டது. இன்று சனிக்கிழமை என்பதால் பெரும் கூட்டம் காணப்பட்டது. அடிதடி, மோதல், தீவைப்பைப் பார்த்து மக்கள் பதறியடித்துக் கொண்டு ஓடினர். அந்த இடமே போர்க்களம் போலக் காணப்பட்டது.
உடனடியாக போலீஸார் விரைந்து வந்தனர். கலவரத்தில் ஈடுபட்டவர்களைப் பிடித்தனர். தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்பென்சரில் நடந்த இந்த மோதலைத் தொடர்ந்து அண்ணா சாலையிலும் பரபரப்பு காணப்பட்டது.












Click it and Unblock the Notifications