பெரும்பான்மையை நிரூபிக்காமலேயே மேகாலயா முதல்வர் ராஜினாமா
ஷில்லாங்: மேகாலய சட்டசபையில் இன்று பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலையில், முதல்வர் லபாங் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
சமீபத்தில் நடந்த மேகாலய சட்டசபைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. 60 உறுப்பினர் கொண்ட சட்டசபையில் ஆட்சியமைக்க 31 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை.
ஆனால், ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சிக்கு 25 இடங்களில் தான் வெற்றி கிடைத்தது. ஆனாலும், மெஜாரிட்டியை நிரூபிப்பதாகக் கூறி முதல்வர் பதவியில் தொடர்ந்தார் லபாங்.
இன்று அவர் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டிருந்தார்.
இந் நிலையில் 3 சுயேச்சைகளின் ஆதரவையும் லபாங் பெற்றார். ஆனாலும் மேலும் 3 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்பட்டது.
இதற்கிடையே காங்கிரஸ் எம்எல்ஏக்களின் கூட்டம் நடந்தது. ஆனால், அதில் 22 எம்எல்ஏக்களே பங்கேற்றனர். லபாங் எதிர்ப்பாளர்களான 3 பேர் வரவில்லை.
ஏற்கனவே பெரும்பான்மையை நிரூபிக்க 3 எம்எல்ஏக்கள் பற்றாக்குறை உள்ள நிலையில் தனது கட்சியைச் சேர்ந்த மேலும் 3 எம்எல்ஏக்களும் காலை வாரிவிடும் சூழல் எழுந்ததால் இன்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார் லபாங்.
காங்கிரஸ் எதிர்க் கட்சி வரிசையில் அமரும் என்றார்.
இதையடுத்து பி.ஏ.சங்மா தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சியமைக்க உரிமை கோரும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications