தமிழக மீனவர்களை தாக்குவது புலிகள்-இலங்கை
மதுரை: தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது விடுதலைப் புலிகள்தான். ஆனால், பழி ராணுவத்தின் மீது விழுகிறது என இலங்கை நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ஜெயராஜ் பெர்னாட்டோ புலே கூறினார்.
மதுரை வந்த அவர் புனித வெள்ளியை முன்னிட்டு தூய மரியன்னை தேவாயலத்தில் நடைபெற்ற சிறப்பு பிராத்தனையில் கலந்து கொண்டார்.
பின்பு நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் தாக்கி வருவதாக கூறுவது முற்றிலும் தவறான தகவல்.
தமிழக கடலோர எல்லை பகுதியில் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது விடுதலைப் புலிகள்தான். ஆனால், பழியை இலங்கை ராணுவம் மீது போட்டு விடுகின்றனர்.
இலங்கையில் அமைதி திரும்புவதை புலிகள் விரும்பவில்லை. பிரிவினையை ஏற்படுத்துவதுதான் அவர்களது நோக்கம்.
அவர்கள் வெடிகுண்டு கலாச்சாரத்தையே விரும்புகின்றனர். இந்த பிரச்சனையில் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த திறந்த மனதோடு உள்ளோம். இலங்கையில் அமைதியையும், சமாதானத்தையும் 95 சதவீதம் மக்கள் விரும்புகின்றனர்.
கிழக்கு மாகாணத்தில் மாகாணத் தேர்தல் வரும் 28ம் தேதி நடக்க உள்ளது. இதன் மூலம் அவர்கள் சுய ஆட்சி பெற்ற மாநிலமாக செயல்பட உள்ளனர். விடுதலைப் புலிகள் மீதான நடவடிக்கைகளுக்கு இந்திய அரசு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறது என்றார்.












Click it and Unblock the Notifications