விடாது பெய்யும் மழையால் பெரும் கவலையில் விவசாயிகள்

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் விவசாயிகள் பெரும் கவலையில் மூழ்கியுள்ளனர். லட்சக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நாசமடைந்துள்ளன.

வங்கக் கடலில் ஏற்பட்டிருந்த புயல் சின்னம் தற்போது அரபிக் கடலில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் தொடர்ந்து கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது.

வட மாவட்டங்களில் மழையின் வேகம் சற்று குறைந்துள்ளது. இருப்பினும் காவிரி டெல்டா மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் விட்டு விட்டு மழை பெய்தது. விடிய விடிய பெய்த அடை மழையால் காவிரி டெல்டா மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நாசமடைந்துள்ளன.

நெல், கம்பு, நிலக்கடலை, சோளம் உள்ளிட்ட பயிர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளன.

இடி, மின்னல் தாக்கி இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

திருச்சி மாவட்டத்திலும் தொடர்ந்து மழை பெய்துள்ளது. இதனால் அங்குள்ள ஏரிகள், குளங்கள் நிரம்பியுள்ளன. காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கொள்ளிடத்திலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதேபோல அரியலூர், பெரம்பலூர், கரூர் மாவட்டங்களிலும் கணிசமான அளவில் மழை பெய்துள்ளது.

சென்னையில் மழை குறைந்தது:

தலைநகர் சென்னையில் நேற்று இரவு முதல் மழை இல்லை. இன்று காலை லேசான வெயில் அடித்து வருகிறது. இருப்பினும் வானம் மேகமூட்டமாக காணப்படுகிறது.

கோவை மாவட்டத்தையும் மழை விட்டு வைக்கவில்லை. நீலகிரி மாவட்டத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் தோட்டப் பயிர்களான கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, பீன்ஸ் உள்ளிட்ட பயிர்கள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி நிரம்பியுள்ளது.

கடலூரிலும் நல்ல மழை பெய்துள்ளது. இங்கு முந்திரி உள்ளிட்ட பயிர்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. சாலைகள், கண்மாய்கள், மதகுகள், குளங்கள் ஆகியவையும் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன.

மழை மேலும் 24 மணி நேரத்திற்குப் பெய்யும் என வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளதால் விவசாயிகள் பெரும் கவலையில் மூழ்கியுள்ளனர்.

விஷம் குடித்த விவசாயி:

அடை மழையில் இரண்டு ஏக்கர் நிலத்தில் பயிரிட்டிருந்த நெற் பயிர் பெரும் அழிவைச் சந்தித்ததால் மனம் உடைந்த விவசாயி விஷம் குடித்தார்.

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள ஐம்பதுமேல்நகரம் கிராமத்தைச் சேர்ந்த 50 வயதாகும் போசாங்கு என்கிற விவசாயி, தனக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்திலும், குத்தகைக்கு எடுத்திருந்த ஒரு ஏக்கர் நிலத்திலும் நெல் பயிரிட்டிருந்தார்.

தொடர்ந்து பெய்து வரும் மழையில் இவரது பயிர்கள் அனைத்தும் மூழ்கி, அழுகிப் போய் விட்டன. இதனால் போசாங்கு பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார். வட்டிக்கு கடன் வாங்கி பயிரிட்டு அத்தனையும் மழையில் போய் விட்டதே என்று விரக்தி அடைந்த அவர் விஷம் குடித்து விட்டார்.

உடனடியாக அவரை தஞ்சை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு போசாங்குக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பாம்பனில் கடல் கொந்தளிப்பு:

வங்கக் கடலில் நிலவும் கொந்தளிப்பான சூழ்நிலையால், பாம்பன் கடல் பகுதியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் மக்கள் பீதியடைந்து ஓடினர்.

பாம்பன், தெற்கு கடற்கரைப் பகுதியில் உள்ள சின்னப்பாலம் கிராமத்தில் நேற்று திடீரென கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. கடல் அலைகள் 10 அடி உயரத்துக்கு எழும்பியது. இதனால் கடல் நீர் கிராமத்திற்குள் புகுந்தது.

இதைப் பார்த்த அக்கிராமத்து மக்கள், சுனாமி வரப் போகிறதோ என்று பீதியடைந்து வீடுகளை விட்டு ஓடினர். கடலோரம் நிறுத்தப்பட்டிருந்த படகுகள் கடல் அலையில் தள்ளப்பட்டு ஊருக்குள் வந்தன. 30க்கும் மேற்பட்ட குடிசைகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

கிட்டத்தட்ட அரை மணி நேரம் இந்த கடல் கொந்தளிப்பு காணப்பட்டது. அதன் பின்னர் தண்ணீர் வடிந்து நிலைமை சகஜமானது.

6 மாவட்டங்களில் வெள்ள அபாயம்

இதற்கிடையே, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நெல்லை, குமரி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் இடைவிடாமல் அடைமழை பெய்தது. அணைகள், குளங்கள் நிரம்பி மறுகால் பாய்ந்ததால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக திகழ்கிறது.

வைகை அணை நிரம்பி வருவதாலும் உபரி நீர் அதிக அளவில் திறக்கப்படுவதாலும் வைகை பாசன பகுதிகளான தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மதுரை வைகை ஆற்றின் கரையோரப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். கரையோரப்பகுதிகளில் தண்டோரா போட்டு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருக்கிறது. நேற்று விடிய, விடிய மழை பெய்தது. இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

இடைவிடாத மழையால் குழித்துறை ஆறு, சுசீந்திரம் பழையார்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

கடல் சீற்றம் காரணமாக கரையோர மக்களும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீன்பிடித்தொழில், செங்கல் சூளை தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் மழைக்கு 5 பேர் பலியாகியுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் மழைக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+