முத்துராமலிங்கத்தை மிரட்டவில்லை - டிஜிபி மறுப்பு

தா.கி. கொலை வழக்கில் அரசுத் தரப்பு சாட்சியான முத்துராமலிங்கத்தை மு.க.அழகிரி, அரசு இயந்திரத்தைப் பயன்படுத்தி மிரட்டுகிறார். முத்துராமலிங்கத்தின் மகன் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. இந்த சட்டவிரோத செயலுக்கு முதல்வர் கருணாநிதியும் உடந்தையாக இருக்கிறார் என்று ஜெயலலிதா நேற்று குற்றம் சாட்டியிருந்தார்.
இதற்கு டிஜிபி ராஜேந்திரன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தா.கிருட்டிணன் கொலை வழக்கில் முக்கிய அரசு சாட்சியாக திருமங்கலம் தொகுதி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் முத்துராமலிங்கம் உள்ளார். அவரை இந்த வழக்கில் சாட்சி சொல்லக் கூடாது என்று மிரட்டும் வகையில், அவரது மகன் மீது போலீஸார் பொய் வழக்குப் பதிவு செய்துள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிக்கை விடுத்துள்ளார்.
முத்துராமலிங்கத்தின் மகன் முன்ஜாமீன் கோரியுள்ள நிலையில், அவரது மகனை ஒப்படைக்கும்படி போலீஸார் மிரட்டுவதாகவும், இதனால் அவர் குடும்பத்திற்கு ஆபத்து நேரிட வாய்ப்புள்ளதாகவும் ஜெயலலிதா கூறியுள்ளார். இது முற்றிலும் உண்மைக்கு மாறானதாகும்.
கடந்த 23ம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையிலிருந்து அவனியாபுரம் காவல் நிலையத்தில் பெறப்பட்ட தகவலின் பேரில் அவனியாபுரம் சப் இன்ஸ்பெக்டர் மருத்துவமனைக்குச் சென்றார்.
கத்திக்குத்து காயமடைந்து சிகிச்சையில் இருந்த வில்லாபுரத்தைச் சேர்ந்த கணேசனைப் பார்த்தார். அவர் மயக்க நிலையில் இருந்ததால், அங்கிருந்த அவரது தந்தை மதியழகனை சப் இன்ஸ்பெக்டர் விசாரித்தார். அவர் எழுத்து மூலமாக புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில் கடந்த 22ம் தேதி கணேசன் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தபோது, முத்துராமலிங்கத்தின் மகன் கர்ணன் மற்றும் அவரது நண்பர் ஒருவர் கணேசனை வழிமறித்து வாய்த்தகராறு செய்துள்ளனர் என்று கூறி இருக்கிறார்.
மேலும், எங்கள் ஏரியாவில் உள்ள பெண்ணை எப்படி நீ காதலிக்கலாம் என்று கூறி கணேசனை கர்ணன், வயிற்றில் கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்றதாகவும், அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வருவதற்குள், கர்ணன் அவரது நண்பருடன் தப்பிச் சென்று விட்டதாகவும் கூறியுள்ளார்.
மதியழகன் கொடுத்த புகாரின் பேரில், அவனியாபுரம் போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 24ம் தேதி கணேசன் மயக்கம் தெளிந்த பிறகு புகார் வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதில், கணேசன் கையொப்பமிட்டுள்ளார். பின்னர் நீதித்துறை நடுவர் மருத்துவமனைக்குச் சென்று மரண வாக்குமூலமும் பெற்றுள்ளார்.
ஜெயலலிதா கருத்துப்படி முத்துராமலிங்கத்தின் மகன் மீது பொய் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. பாதிக்கப்பட்டவரின் தந்தை கொடுத்த புகாரின் பேரில்தான் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் நீதித்துறை நடுவர் மரண வாக்குமூலம் பதிவு செய்ததிலிருந்து இந்த வழக்கில் காயம்பட்ட கணேசன் படுகாயமடைந்துள்ளார் என்பதும், அவர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்தது உண்மயான வழக்கே என்றும் காட்டுகிறது. இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
தா.கிருட்டிணன் கொலை வழக்கில் அரசு சாட்சியாகவே முத்துராமலிங்கம் உள்ளார். எனவே அவரை போலீஸ் துறையினர் மிரட்ட வேண்டிய அவசியம் இல்லை. மேலும் அவர் அந்த வழக்கில் சாட்சி அளிப்பதில், அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி பாதுகாப்பு கேட்டு மனு அளித்தால், அவருக்குத் தக்க பாதுகாப்பு அளிக்கப்படும்.
பொய் வழக்குப் போடுவதாக போலீஸ் துறை மீது உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவது, பாதிக்கப்பட்ட மக்களின் புகாரின் அடிப்படையில் எடுக்கும் நடவடிக்கைகளைப் பாதிக்கும். போலீஸ் துறை மீது மக்கள் வைத்திருக்கும் நல்ல அபிப்பிராயத்தையும் பாதிக்கும் என்று கூறியுள்ளார் டிஜிபி ராஜேந்திரன்.
--












Click it and Unblock the Notifications