ஈழம்-உறக்கத்தை அரசு கலைக்க வேண்டும்-ராமதாஸ்

தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஈழத் தமிழர்கள் நலன் காக்கக் கோரியும், இலங்கைக்கு இந்திய அரசு ராணுவ உதவிகளை செய்யக் கூடாது என்று வலியுறுத்தியும் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
பாமக நிறுவனர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாள் தொல். திருமாவளவன், பல்வேறு தமிழர் அமைப்புகளின் பிரதிநிதிகள், தமிழறிஞர்கள் என 700க்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
மெமோரியல் ஹால் அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, இலங்கையில் தமிழர்களை கொன்று குவிக்கும் இலங்கை ராணுவத்தைக் கண்டித்து தலைவர்கள் கோஷமிட்டனர். மேலும், தமிழக மீனவர்கள் இலங்கை படையினரால் தாக்கப்படுவதிலிருந்து தப்பிக்க தமிழக மீனவர்களுக்கு ஆயுதம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதில் ராமதாஸ் பேசுகையில்,
ஒட்டுமொத்தமாக 6.2 கோடி தமிழ் மக்களின் உணர்வுகளைத் தான் கோபத்தோடும், கொந்தளிப்போடும் நாங்கள் இங்கே வெளிப்படுத்துகிறோம். இது ஆரம்பம்தான்.
முதலிலே இந்த பிரச்சினைக்காக தமிழகத்தில் குரல் கொடுப்பதற்கு சிலருக்கு தயக்கம்.
ஆனால் துணிந்து ஒரு தமிழன், இந்திய அளவிலே இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளராக இருக்கின்ற டி.ராஜா, நாடாளுமன்ற மேலவையிலே முழங்கினார். தேசிய கட்சியில் ஒரு தமிழன் இருப்பதால், அந்த உணர்வு பீறிட்டு வந்திருக்கிறது. சபாஷ் ராஜா, சபாஷ்.
அடுத்து பாராட்ட வேண்டியது ஹைதராபாத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 24வது தேசிய மாநாட்டிலே ஒரு தீர்மானத்தை முன்மொழிந்த அக் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியனை.
சொந்த நாட்டு மக்களையே கொன்று குவிக்கும் இலங்கை ராணுவத்திற்கு ஆயுத உதவிகள் செய்வதை இந்திய அரசு நிறுத்த வேண்டும் என்ற அந்த தீர்மானம் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது. சபாஷ் பாண்டியன், சபாஷ்.
1998ம் ஆண்டு ஜூன் மாதம் 11ம் தேதி டெல்லியில் தமிழக எம்.பிகள் குழுவினர் என்னுடைய தலைமையில் அப்போதைய பிரதமர் வாஜ்பாயிடம் மனு கொடுத்தோம். அந்த மனுவில், இலங்கையில் தமிழர்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர். அந்நாடு தொடர்பான வெளிநாட்டுக் கொள்கையை இந்திய அரசு மாற்ற வேண்டும். இலங்கையில் வாழும் தமிழர்கள் நலனை பாதுகாக்க முன்வர வேண்டும் என, வலியுறுத்தினோம்.
சுப்பிரமணிய சாமி உள்ளிட்ட 36 எம்.பிகள் என்னுடன் வந்தனர். அந்த மனுவில் முதல் கையெழுத்து இட்டவர் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா. நான் கேட்கிறேன் இன்றைக்கு என்ன மாற்றம் வந்தது. ஈழத்தமிழர்கள் பிரச்சினையில் அண்ணா, எம்.ஜி.ஆர். இவர்களுடைய கொள்கை என்ன?
இந்த நேரத்தில் தமிழக அரசு என்ன செய்ய வேண்டும். தமிழக அரசு விழித்து கொள்ள வேண்டும். உறக்கத்தை கலைக்க வேண்டும். ஏன் என்றால், ஒரு தேசிய கட்சியே இந்தளவுக்கு தீர்மானம் நிறைவேற்றிய பிறகு இது சரியான தருணம். நழுவ விடக்கூடாது. இதற்காக எந்த விலையும் கொடுக்க தேவையில்லை. நாங்கள் விலை கொடுக்க தயார்.
உங்கள் காலத்திலேயே இலங்கைப் பிரச்னையைத் தீர்க்க வேண்டும் என முதல்வர் கருணாநிதிக்கு பல கடிதங்கள் எழுதியுள்ளேன். இது நல்ல தருணம். கருணாநிதி நழுவ விடக் கூடாது.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஹைதராபாத்தில் நிறைவேற்றியுள்ள அந்த தீர்மானத்தை தமிழக சட்டமன்றத்திலே நிறைவேற்றுவதற்கு, விடுதலை சிறுத்தைகளும், பாட்டாளி மக்கள் கட்சியும் முனைப்போடு செயல்படும்.
அந்த வேலை உங்களுக்கு தேவையில்லை. ஒட்டு மொத்த தமிழர்களுக்கு தலைமை தாங்குகின்ற, பிரதிநிதித்துவம் வகிக்கின்ற தமிழக அரசே அந்த தீர்மானத்தை சட்டமன்றத்திலே நிறைவேற்றி தேவைப்பட்டால் இங்கிருந்து அனைத்து கட்சிகள் சார்பாக பிரதிநிதிகளை டெல்லிக்கு அனுப்பி பிரதமரை சந்தித்து இதற்கான ஒரு தீர்வை விரைவிலே காண்போம் என்று தமிழக முதல்வர் கலைஞர் அறிவிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம் என்றார் ராமதாஸ்.
திருமாவளவன் பேசுகையி்ல்,
இலங்கை கடற்படையினர், தமிழ்நாட்டு மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவதை இந்தியா கண்டிக்கவில்லை. எனவே தமிழக மீனவர்களை பாதுகாக்க கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும்.
இந்திய இலங்கை ஒப்பந்தத்தின்படி தமிழர் வாழும் பகுதிகளை வடக்கு கிழக்கு மாகாணங்களாக பிரிக்க கூடாது. அதை பிரித்து தமிழ் ஈழத்தையே நிரந்தரமாக பிரிக்க நினைக்கிறார்கள். அதை எப்படி அனுமதிக்க முடியும்.
தமிழர் வாழும் பகுதியை வடக்கு கிழக்கு மாகாணமாக பிரிக்க கூடாது என்று முதல்வர் கருணாநிதி மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications