போலி ஜாமீனில் 150 கைதிகள் விடுதலை: மீண்டும் துருவுது போலீஸ்
நெல்லை: நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மத்திய சிறையில் போலி ஜாமீன் கொடு்த்து 150 கைதிகள் விடுதலையான வழக்கை போலீசார் மீண்டும் விசாரிக்கத் தொடங்கியுள்ளனர்.
பாளையங்கோட்டை மத்திய சிறையில் கடந்த 98 மற்றும் 99ம் ஆண்டுகளில் சுமார் 150 கைதிகள் போலி ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். இந்த விவரத்தை 2000ம் ஆண்டில் உளவு பிரிவு போலீசாரும், சிறை உயர் அதிகாரிகளும் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து சென்னை சிறை உயர் அதிகாரிகள் மற்றும் சிறை துறை உயர் அதிகாரிகள் அப்போதைய சிறை கண்காணிப்பாளர் ராஜன், ஜெயிலர் ராஜேந்திரன், வார்டன்கள் பாலகிருஷ்ணன், கோவிந்தன் உள்பட 7 பேரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் வார்டன்கள் பாலகிருஷ்ணன், கோவிந்தன் உள்பட 4 வார்டன்களின் தவறான நடவடிக்கையால் போலி ஜாமீன் மூலம் 150 கைதிகள் வெளியே சென்றது தெரியவந்தது.
இதன் பேரில் 4 வார்டன்களையும் பாளை பெருமாள்புரம் போலீசார் கைது செய்தனர். இவர்கள் நாகர்கோவில் மற்றும் நாங்குநேரி சிறைகளில் சில ஆண்டுகளாக அடைக்கப்பட்டிருந்தனர். 4 வார்டன்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் இவ்வழக்கில் குற்றம் நிருபிக்கப்படவில்லை என கூறி வார்டன்களை கோர்ட் விடுவித்தது.
இந்நிலையில் தற்போது இவ்வழக்கினை மீண்டும் விசாரணை நடத்துமாறு சிறை துறை ஏடிஜிபி சுப்பிரமணியன் உத்தரவிட்டார். இதன் பேரில் நாகர்கோவில் சிறை கூடுதல் கண்காணிப்பாளர் ஜார்ஜ் தியோடர் செல்வின் உள்பட 4 உயர் அதிகாரிகள் பாளை சிறையிலுள்ள வார்டன்கள், சென்னை பூழல் மத்திய சிறையில் தற்போது பணியாற்றி வரும் கண்காணிப்பாளர் ராஜேந்திரன், அரசு தரப்பு சாட்சி (அப்போதைய பாளை ஜெயிலர்) ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
பின்னர் விசாரணை அதிகாரிகள் நெல்லை, தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்திலுள்ள சில அதிகாரிகள், தூத்துக்குடி மற்றும் ஸ்ரீவைகுண்டம் ஆகியவற்றுள்ள சில வார்டன்கள் ஆகியோரிடமும் விசாரணை நடத்தினர். இவ்விசாரணை வரும் 5ம் தேதியுடன் முடிவடைகிறது.
விசாரணை அறிக்கை சிறை துறை ஏடிஜிபி சுப்பிரமணியனிடம் அளிக்கப்பட உள்ளது. இவ்வழக்கில் மீண்டும் விசாரணை நடந்து வருவதால் சிறை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications