ரயில் கட்டணக் குறைப்பு-இன்று முதல் அமல்
சென்னை: ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பயணிகள் கட்டணக் குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
இரு வாரங்களுக்கு முன் 2008-09ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை அமைச்சர் லாலுபிரசாத் யாதவ் தாக்கல் செய்தார். அதில் பயணிகள் கட்டணத்தைக் குறைத்து சலுகைகளை அறிவித்தார். புதிய ரயில்கள் பற்றிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.
இந்த அறிவிப்புகள் இன்று முதல் (செவ்வாய்கிழமை) அமலுக்கு வருகின்றன.
இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
பயணிகள் ரயி்ல், மெயில்கள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயி்ல்களில் தூங்கும் வசதி கொண்ட 2ம் வகுப்பு பெட்டிகளில் கட்டணம் 5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
50 ரூபாய்க்கு மேற்பட்ட டிக்கெட் கட்டணத்துக்கு மட்டும் இச்சலுகை பொருந்தும். 50 ரூபாய்க்கு குறைவான கட்டணங்களை பொருத்தவரை ஒரு ரூபாய் கட்டண தள்ளுபடி அளிக்கப்படும்.
அதே நேரத்தில் புறநகர் ரயில்களில் 2ம் வகுப்பு கட்டணத்தில் எந்தவித மாற்றமும் இல்லை.
முக்கிய ரயில்களில் ஏ.சி. ரெயில் கட்டணம் 2 வகையாக வசூலிக்கப்படும். அதன்படி, இன்று (செவ்வாய்கிழமை) முதல் ஜூலை 31ம் தேதி வரையும், செப்டம்பர் 1ம் தேதி முதல் ஜனவரி 31ம் தேதி வரையும் சீசன் காலமாக கருதப்படும்.
பிப்ரவரி 1 முதல் மார்ச் 31ம் தேதி வரையும், ஆகஸ்டு 1 முதல் ஆகஸ்டு 31ம் தேதி வரை சீசன் அல்லாத காலமாகவும் கணக்கிடப்படும். அதன் அடிப்படையில் குறைக்கப்பட்ட புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முக்கிய ரயில்களில் சீசன் காலத்தில் முதல் வகுப்பு ஏ.சி. கட்டணம் 3.5 சதவீதமும் குறைக்கப்பட்டுள்ளது. பிற ரயில்களில் சீசன் அல்லாத காலங்களில் 7 சதவீதமும், சீசன் காலத்தில் 3.5 சதவீதமும் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
2 அடுக்கு ஏ.சி. பெட்டியில் சீசன் காலத்தில் 2 சதவீதமும் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. சீசன் அல்லாத காலத்தில் 4 சதவீதமும், சீசன் காலத்தில் 2 சதவீதமும் குறைக்கப்படுகிறது.
81 படுக்கைகள் கொண்ட ரயில் பெட்டியில் 2ம் வகுப்பு கட்டணம் அனைத்து சீசன்களும் 6 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. 102 இருக்கைகள் கொண்ட ஏ.சி. பெட்டியில் ஒரு பயணிக்கான கட்டணம் சீசன் காலத்தில் 5 சதவீதமும், சீசன் அல்லாத காலத்தில் 10 சதவீதமும் குறைக்கப்பட்டுள்ளது.
72 படுக்கைகள் கொண்ட 3 அடுக்கு ஏ.சி. பெட்டியில் சீசன் காலத்தில் 5 சதவீதமும், சீசன் அல்லாத காலத்தில் 10 சதவீதமும் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
சதாப்தி, ஜன சதாப்தி எக்ஸ்பிரஸ், ஏழைகள் ரதம், ராஜ்தானி மற்றும் சீசன் ரயில் டிக்கெட்டுக்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
கட்டணம் குறைப்புக்கு முன்னர் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தால் வித்தியாசப்படும் கட்டணத் தொகை திரும்பித் தரப்படும். இந்த கட்டண குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications