ஜூலை 15 முதல் அரசு கேபிள் டிவி!!
சென்னை: தமிழக அரசின் அரசு கேபிள் டிவி கழகம் ஜூலை முதல் செப்டம்பர் வரை மூன்று கட்டங்களாக தனது பணிகளைத் தொடங்கவுள்ளது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு தமிழக அரசின் அரசு கேபிள் டிவி கழகத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து முதல்வர் கருணாநிதி தலைமையில் உயர் மட்டக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடந்தது. அதில் கேபிள் டிவி நடவடிக்கைகளை எப்படி மேற்கொள்வது என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஜூலை 15ம் தேதி அரசு கேபிள் டிவி சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக நீலகிரி, கோவை, ஈரோடு, நாமக்கல், கரூர், சேலம், திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டனம் ஆகிய மாவட்டங்களில் அரசு கேபிள் டிவி சேவை தொடங்கப்படுகிறது.
2வது கட்டமாக ஆகஸ்ட் 15ம் தேதி நெல்லை, கன்னியாகுமரி, மதுரை, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அரசு கேபிள் தொடங்கப்படுகிறது.
சென்னையில் செப்டம்பர் 15ம் தேதி அண்ணா பிறந்த நாளன்று அரசு கேபிள் சேவை தொடங்கப்படுகிறது.
அரசு கேபிள் டிவி கழகத்திற்குத் தேவையான சாதனங்கள் உள்ளிட்டவற்றை வாங்க பகிரங்க டென்டர் விடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் உள்துறை, நிதித்துறை, தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர்கள், அரசு கேபிள் டிவி கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications