இலங்கை விமானப்படை தாக்குதலில் தமிழ் மாணவி பலி

முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவமது பகுதி அருகே உள்ள புன்னை நிரவியாடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் வீடுகள் மீது இலங்கை ராணுவ போர் விமானங்கள் இன்று அதிகாலையில் தீடீரென்று குண்டுமழை பொழிந்தன.
இந்த தாக்குதலில் பல வீடுகள் இடிந்து நாசமாயின. அன்சிலாஸ்தியன் திலுக்ஷனா என்ற 15 வயது பள்ளி மாணவி இதில் பலியானார்.
சிங்கள விமானப் படையின் எப்-7 ரக நான்கு விமானங்கள் இந்த தாக்குதலை நடத்தியதாக விடுதலைப்புலிகளின் செய்தித் தொடர்பாளர் செல்வி நவரூபன் தெரிவித்தார்.
புலிகளுக்கு பைப் சப்ளை-6 பேர் கைது:
இந்நிலையில் , புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் கடலோரப் பகுதியில் விடுதலைப் புலிகளுக்கு வெடிகுண்டுகள் தயாரிக்க உதவும் இரும்பு பைப்புகளை கடத்த முயன்ற மீனவர் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை வழியாக விடுதலைப் புலிகளுக்கு பொருள்கள் கடத்தப்படுவதாக தமிழக க்யூ பிராஞ்சு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் புதுக்கோட்டை கடலோரப் பகுதிகளில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.
இந் நிலையில் மீமிசல் கடற்கரைப் பகுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் வந்த டிராக்டரை போலீசார் மறித்து சோதனையிட்டனர். அதில் சுமார் 20 அடி நீளமுள்ள 53 இரும்பு பைப்புகள் இருந்தன.
டிராக்டரில் இருந்த ரகு என்ற மீனவர் உள்பட ராமநாதபுரத்தை சேர்ந்த முத்துராமலிங்கம், மணி, குஞ்சான், முத்து, சிவசாமி ஆகியோரிடம் போலீசார் விசாரித்தனர்.
அதில், அந்த பைப்புகளை படகுமூலம் விடுதலைப்புலிகளுக்கு கடத்த இருந்ததை அவர்கள் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் விடுதலைப் புலிகளுக்கு பொருள்கள் சப்ளை செய்யும் ஏஜெண்டுகளான வீரமணி, சுரேந்திரன் ஆகியோரை தேடி வருகின்றனர்.