சரப்ஜித் சிங்கின் தூக்கு தண்டனை தள்ளி வைக்கப்படவில்லை: பாக்.
இஸ்லாமாபாத்: சரப்ஜித் சிங்கின் தூக்கு தண்டனை தள்ளி வைக்கப்படவில்லை என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் நடந்த குண்டு வெடிப்பில் தொடர்பிருப்பதாக கைது செய்யப்பட்ட இந்தியரான சரப்ஜித் சிங்குக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சரப்ஜித் குடும்பத்தினர் அவரை காப்பாற்றும்படி மத்திய அரசிடம் முறையிட்டனர்.
இதைத் தொடர்ந்து சரப்ஜித் சிங்குக்கு பொது மன்னிப்பு அளிக்க வேண்டும் என்று இந்திய அரசு கோரிக்கை விடுத்தது. இதுகுறித்துப் பரிசீலித்த அதிபர் முஷாரப், மே 1ம் தேதி வரை தூக்குத் தண்டனையை தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
தற்போது இந்தக் கெடு முடிவடையவுள்ளது. இதையடுத்து மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சரப்ஜித் சிங்குக்கு பொது மன்னிப்பு அளிக்க இந்தியா மீண்டும் கோரியுள்ளது. இதையடுத்து மேலும் ஒரு மாதத்திற்கு தூக்குத் தண்டனை தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின.
ஆனால் இதை பாகிஸ்தான் மறுத்துள்ளது. பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரஷித் குரேஷி கூறுகையில், தூக்கு தண்டனையை தள்ளி வைப்பது குறித்து அதிபரிடம் இருந்த எந்த உத்தரவும் வரவில்லை என்றார் அவர்.
அதிபர் முஷரப் மனது வைத்தால் மட்டுமே சரப்ஜித்தை காப்பாற்ற முடியும் என்று அவரது வக்கீல் அப்துல் அமீது கூறியுள்ளார். இந்த நிலையில், இந்த பிரச்னையில் தற்போது உதவி வரும் மனித உரிமை அமைப்பைச் சேர்ந்த அன்சர் பர்னேன், சரப்ஜித்துக்கு பொது மன்னிப்பு கோரி மீண்டும் மனு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.









Click it and Unblock the Notifications