திமுகவினரின் கோஷ்டி சண்டையில் டிஎஸ்பிக்கும் உதை!
உடுமலைப்பேட்டை: உடுமலைபேட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கான திமுக நிர்வாகிகள் தேர்தலில் அடிதடியி்ல் ஈடுபட்ட திமுகவினரை சமாதானம் செய்ய முயன்று பஞ்சாயத்து பேசிய டிஎஸ்பிக்கு அடி-உதை விழுந்தது.
உடுமலைபேட்டை அருகே தளி சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் திமுக உட்கட்சி தேர்தல் நடந்தது.
தேர்தலில் பதவிகளைப் பிடிப்பதில் நகர் மன்ற திமுக தலைவர் வேலுசாமி தலைமையிலான ஒரு கோஷ்டிக்கும், முன்னாள் ஒன்றியச் செயலாளர் திராவிட மணி தலைமையிலான ஒரு குரூப்புக்கும் இடையே கடும போட்டி நடந்து வருகிறது.
தேர்தலில் வேலுசாமி தலைமையில் அவரது கோஷ்டியினர் வாக்களிக்க வந்தபோது அவர்களுக்கும் திராவிட மணி தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து திராவிட மணியின் ஆதரவாளர்கள் புகார் கொடுக்க டிஎஸ்பி அலுவலகம் சென்றனர். டிஎஸ்பி ஈஸ்வரன் இரு தரப்பையும் தனது அறைக்கு அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார்.
அப்போது அவர் முன்பே இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் டிஎஸ்பியின் அறையில் கட்டி உருண்டு சண்டையிட்டனர்.
இரு தரப்பும் வேட்டி, சட்டைகளை கிழித்துக் கொண்டு ஜட்டி, 'பட்டா பட்டி' அண்ட்ராயருடன் டிஎஸ்பியின் அறையில் பாய்ந்து பாய்ந்து அடித்துக் கொண்டனர்.
அவர்களை தடுக்க முயன்ற போலீசாருக்கும் டிஎஸ்பிக்கும் கூட அடி, உதை விழுந்தது. ஒரு திமுக தொண்டர் தாக்கியதில் டிஎஸ்பி ஈஸ்வரனின் மூக்கு உடைந்தது.
இதில் ஈஸ்வரன் நிலை குலைந்து சரிந்து கீழே விழுந்தார். அவரை டிஸ்பி அலுவலக ஊழியர்கள் திமுகவினரிடமிருந்து 'காப்பாற்றி' சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இது குறித்து டிஎஸ்பி ஈஸ்வரன் கோவை எஸ்பி கார்த்திகேயனிடம் புகார் தெரிவித்தார். அதன் பேரில் எஸ்பி கார்திகேயன் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
இவ்வளவு நடந்தும் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை என்பது தான் முக்கியமான நியூஸ்.












Click it and Unblock the Notifications