கார்-லாரி மோதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உள்பட 7 பேர் பலி
அரூர்: தர்மபுரி அருகே காரும் லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உள்பட 7 பேர் பரிதாபமாக பலியாயினர். 4 பேர் படுகாயமடைந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் நாகலாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் பாண்டியன் (45)-சுசிலா (40 தம்பதி. இவர்களுக்கு நீல மேகம் (25), அருண் (15), திவாகர் (10) ஆகிய மகன்கள் உள்ளனர். நீலமேகம் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
கோவையில் உள்ள உறவினர் வீட்டு கிரகபிரவேச நிகழ்ச்சியில் கலந்து டாடா சுமோவில் பாண்டியன், சுசீலா, நீலமேகம், அருண், திவாகர் மற்றும் உறவினர்கள் சுசீலா, லலிதா (35), உண்ணாமலை, சண்முகம், அசின் (7) ஆகியோர் இன்று காலை புறப்பட்டனர். காரை டிரைவர் சுதாகர் ஓட்டிச் சென்றார்.
மதியம் 12 மணியளவில் தர்மபுரி மாவட்டம் அரூர்- ஊத்தங்கரை மெயின் ரோட்டு கொங்க கூத்தாடிபட்டி என்ற இடத்தில் சென்று கொண்டு இருந்தது. அப்போது சேலத்தில் இருந்து திருப்பத்தூர் நோக்கி வேகமாக சென்ற லாரி, கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.
இதில் பாண்டியன், சுசீலா, நீலமேகம், அருண், திவாகர் மற்றும் உறவினர்கள் சுசீலா, லலிதா ஆகிய 7 பேரும் உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார்கள். மேலும் படுகாயமடைந்த கார் டிரைவர் சுதாகர், உண்ணாமலை, சண்முகம், அசின் ஆகியோர் அரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் அசின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
விபத்து குறித்து தகவலறிந்த தர்மபுரி எஸ்பி நஜ்முல் கோடா, அரூர் டிஎஸ்பி மோகன், இன்ஸ்பெக்டர் தங்கவேல், எஸ்ஐ முரளிதரன் ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் பல மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications
