46% மின்சாரம் 'ஓசி'- ஆற்காடு வீராசாமி தகவல்
சென்னை: தமிழகத்தில் 46 சதவீத மின்சாரம் இலவச திட்டங்களுக்காக விநியோகம் செய்யப்படுகிறது என்று அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறினார்.
சட்டசபையில் மின்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின்போது திமுக எம்எல்ஏ முல்லைவேந்தன் மற்றும் அதிமுக கொறடா செங்கோட்டையன் ஆகியோர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் ஆற்காடு வீராசாமி அளித்த பதில்:
தமிழகத்தில் இலவச மின்சார இணைப்பு கேட்டு நான்கு லட்சம் விவசாயிகள் காத்திருக்கின்றனர். பதிவு மூப்பு அடிப்படையில் ஆண்டுக்கு 40 ஆயிரம் இணைப்புகள் தான் வழங்க முடியும். இந்த எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்கு சாத்தியமில்லை. ஒரு இலவச மின் இணைப்பு வழங்க மின்வாரியத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் செலவாகிறது.
மொத்த மின்சாரத்தில் 28 சதவீதம் விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்துக்கும், குடிசைகளுக்கும், கைத்தறி நெசவாளர்களுக்கும் இலவசமாகவே போய் விடுகிறது. மேலும் 18 சதவீதம் "லைன் லாஸ்' என்ற அடிப்படையில் போய் விடுகிறது. இந்த வகையில் 46 சதவீதம் போக, எஞ்சியுள்ள 54 சதவீதம் மட்டுமே நுகர்வோருக்கு வழங்கப்பட்டு அவர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
விவசாயத்திற்கு பகலில் ஆறு மணி நேரம், இரவில் 12 மணி நேரம் என்ற அளவில் மின்சாரம் கொடுத்து வருகிறோம். 25 ஆண்டுகளாக இதே கொள்கை தான் பின்பற்றப்படுகிறது. பகலில் தொழிற்சாலைகளுக்கு மின்சாரம் வழங்க வேண்டியிருப்பதால் விவசாயிகளுக்கு பகலில் வழங்கப்படும் மின்சார கால அளவை அதிகரிக்க முடியாது என்றார் ஆற்காடு வீராசாமி.












Click it and Unblock the Notifications