ஹர்பஜனை கடுமையாக தண்டிக்க வேண்டும்: பாண்டிங்

ஆஸ்திரேலிய பத்திரிகை ஒன்றுக்கு பாண்டிங் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின்போது வீரர் ஆண்ட்ரு சைமண்ட்ஸை 'குரங்கு' என்றும் இன துவேஷ வார்த்தைகளாலும் ஹர்பஜன் சிங் திட்டினார். அந்த சர்ச்சையில் அவர் எப்படி ரொம்ப சுலபமாக தப்பித்தார் என்பதை இன்னும் என்னால் ஜீரணிக்க முடியவில்லை.
உலகிலேயே மிக மோசமான ஒழுங்கீனம் பிடித்த ஹர்பஜன் சிங்கை மக்களே தண்டிக்கவேண்டும்.
20 டெஸ்ட் போட்டிகள் வரை தன்னுடன் விளையாடிய சக வீரரை அடித்துள்ளார். இப்போது ஹர்பஜனின் உண்மை சொரூபத்தை மக்கள் உணரத் தொடங்கியிருப்பார்கள். தொடர்ந்து அவர் தவறுகளை செய்துவருகிறார்.
ஆஸ்திரேலியாவில் அவர் செய்த தவறுக்காக மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது. ஆனால் ஹர்பஜனை காப்பாற்றுவதற்காக அந்த சுற்றுப்பயணத்தையே ரத்து செய்யப்போவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் மிரட்டல் விடுத்ததால் தண்டனை தள்ளுபடியானது. பெயரளவில் அவரது சம்பளத்தில் பாதியை அபராதமாக விதித்தார்கள்.
இப்போது இந்த விவகாரத்தில் அவர்கள் என்ன முடிவெடுக்கப் போகிறார்கள் என்பதைப் பார்க்கத்தானே போகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஒருநாள் தள்ளி அறிக்கை தாக்கல்: நானாவதி
ஸ்ரீசாந்த் கன்னத்தில் ஹர்பஜன் அறைந்த விவகாரம் தொடர்பான இறுதி அறிக்கையை பிசிசிஐ விசாரணை கமிஷனர் நானாவதி வரும் செவ்வாய்க்கிழமை (மே 13) தாக்கல் செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.ஐபிஎல் லீக் போட்டியின் போது கடந்த 25ம் தேதி நடந்த போட்டியில் தோல்வி அடைந்த கடுப்பில் எதிரணி வீரர் ஸ்ரீசாந்தை கன்னத்தில் ஹர்பஜன் சிங் அறைந்தார். இதையடுத்து ஐபிஎல் போட்டிகளில் விளையாட ஹர்பஜனுக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக கிரிக்கெட் வாரியத்தால் நியமிக்கப்பட்ட கமிஷனர் வக்கீல் சுதிர் நானாவதி விசாரணை நடத்தி வந்தார். சம்பவம் தொடர்பான வீடியோ ஆதாரங்களை பார்த்து அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்த நானாவதி சம்பந்தப்பட்ட ஹர்பஜனையும், ஸ்ரீசாந்த்தையும் நேற்று ஆஜராகும்படி சம்மன் அனுப்பியிருந்தார்.
இதையடுத்து பிற்பகல் 2 மணியளவில் இருவரும் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர்.
இதையடுத்து விசாரணயை வக்கீல் நானாவதி நேற்று முடித்துக் கொண்டார். அறிக்கையை திங்கள்கிழமை தாக்கல் செய்யப்போவதாக அறிவித்திருந்தார்.
இந்தநிலையில் ஒரு நாள் தாமதமாக வரும் செவ்வாய்க்கிழமையன்று அறிக்கையை கிரிக்கெட் வாரியத்திடம் தாக்கல் செய்யப்போவதாக இன்று கூறினார். இது பற்றி அவர் மேலும் கூறுகையில், குஜராத் உயர்நீதிமன்றத்தில் திங்கள்கிழமையன்று சில வழக்குகளில் ஆஜராக வேண்டியுள்ளது. அன்றுமுழுவதும் நான் பிஸியாக இருக்க வேண்டியிருப்பதால் அறிக்கையை மறுநாள் தாக்கல் செய்ய முடிவெடுத்துள்ளேன்.
எதேச்சையாக, விசாரணைக்கு தரப்பட்ட 15 நாள் காலஅவகாசமும் அன்றுதான் முடிவடைகிறது.
எனது அறிக்கையில் சம்பந்தப்பட்ட வீரர்களுக்கு எந்த தண்டனையையும் பரிந்துரைக்கவில்லை. நடந்த சம்பவத்தை விசாரித்து குறிப்பிட்டுள்ளேன்.
வீரர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டியது வாரியத்தின் பொறுப்பு. தண்டனையும் தரலாம். அப்படியே விட்டும்விடலாம்.
வாரிய விதிகளின்படி ஹர்பஜன் மீது நான்காவது மட்ட குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த அளவு குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும்பட்சத்தில் வீரர்களுக்கு அதிக எண்ணிக்கை போட்டிகளுக்கு தடைவிதிக்கப்படலாம். ஆயுட்காலத் தடைகூட வழங்கமுடியும்.
முகமது அசாருத்தீன், அஜய் ஜடேஜா போன்ற வீரர்களுக்கு ஆயுட்கால தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications