ரௌடிகள் என்கவுன்டரில் சுயநலமில்லை: காங். கருத்து

சட்டசபையில் இன்று போலீஸ் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின்போது சுதர்சனம் பேசியதாவது:
பட்டப்பகலில் நடக்கும் படுகொலைகள், சினிமா ஸ்டைலில் கூலிப்படைகளை ஏவி கொலை, நீதிமன்ற வளாகத்திலேயே துணிகர கொலை என வன்முறைகள் தமிழகத்தில் அதிகரித்திருப்பது கவலை அளிக்கும் விஷயமாகும். ரௌடிகளுடன் அரசியல்வாதிகளுக்கு உள்ள சட்டவிரோத தொடர்பை கட்டுப்படுத்த நடவடிக்கை எடு்க்கவேண்டும்.
கூலிப்படை கொலை மற்றும் குற்ற சம்பவங்களை முளையிலேயே கிள்ளி எறிந்து, தமிழகம் தொடர்ந்து அமைதிப் பூங்காவாக திகழச் செய்யவேண்டும்.
பயங்கர ரௌடிகளை போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொன்ற சம்பவங்கள் பாராட்டத்தக்கவையாகும். போலீசார் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக ரௌடிகளை சுட்டுக் கொல்வதில் தவறில்லை.
சினிமாவில் சமூக விரோதிகளை தன்னந்தனியாக கதாநாயகன் புரட்டியடிப்பார். ஆனால் நிஜத்தில் இதெல்லாம் சாத்தியமில்லை. ரௌடிகள் கொட்டத்தை ஒடுக்கவேண்டுமானால் இதுபோன்ற என்கவுன்டர் சம்பவங்களில் போலீஸார் ஈடுபடவேண்டியிருக்கிறது.
முன்விரோதம் காரணமாகவோ, சுயநலத்துடனோ போலீசார் என்கவுன்டர் செய்வதில்லை. மக்களையும், அவர்களது உடைமைகளையும் பாதுகாக்கும் பொருட்டு ரௌடிகளுக்கு எதிரான இறுதி ஆயுதமாகவே இதை போலீசார் மேற்கொள்கின்றனர்.
தங்ககாசு மோசடி:
லட்சக்கணக்கான அப்பாவி பொது மக்களிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய்களை ஹாங்காங்கை சேர்ந்த கோல்டு குவெஸ்ட் மல்டிலெவல் மார்க்கெட்டிங் நிறுவனம் மோசடி செய்துள்ளது. இதற்குக் காரணமான நிர்வாகிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவிடாமல் ஒரு முக்கியப்புள்ளி பின்னணியில் இருக்கிறார்.
இந்த மோசடியில் சம்பந்தப்பட்ட அனைவரையும் குண்டர்சட்டத்தில் அடைக்க வேண்டும். கோல்டு குவெஸ்ட் நிறுவன சொத்துக்களை அரசு பறிமுதல் செய்யவேண்டும்.
மோசடி நிர்வாகிகளை பாதுகாக்க முயல்பவர்களை தண்டிக்கவேண்டும்.
டாஸ்மாக் விற்பனை:
மது விற்பனை மூலம் டாஸ்மாக் அதிக வருவாயை ஈட்டி வருகிறது. இந்நிலையில் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் மதுபான விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் இன்றைய இளைஞர் சமுதாயத்தினர் குறிப்பாக தகவல் தொழில் நுட்பம் மற்றும் சாப்ட்வேர் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் போதைக்கு அடிமையாகி வருகின்றனர்.
இந்த மோசமான போக்கை தமிழக அரசு தடுக்கவேண்டும் என்றால் மதுபானங்களின் விலையை பல மடங்கு உயர்த்தவேண்டும். இவ்வாறு சுதர்சனம் பேசினார்.












Click it and Unblock the Notifications