தமிழகத்தில் தலித் மக்கள் கல்வியறிவு சரிவு-அதிகாரி தகவல்
சென்னை: நாட்டின் மொத்த சராசரி அளவீட்டை விட குறைவாக தமிழகத்தில் தலித் மாணவ, மாணவியரின் கல்வியறிவு இருப்பதாக கடந்த நிதியாண்டுக்கான மத்திய தலைமை தணிக்கைத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழகத்துக்கான தணிக்கைத்துறை தலைமை அதிகாரி எஸ்.முருகையா கூறுகையில், 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நாட்டின் சராசரி தலித் கல்வியறிவைக் காட்டிலும் தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் கல்வியறிவு விகிதம் சரிந்துள்ளது. தலித் மேம்பாட்டுக்கு ஏராளமான நிதி ஒதுக்கப்பட்டபோதிலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக பழங்குடியின மக்கள் கல்வியறிவு மிகவும் குறைந்துள்ளது. நாட்டின் பழங்குடியின மக்கள் சராசரி கல்வி அறிவைக்காட்டிலும் குறைவாக தமிழ்நாட்டில் உள்ளனர். தமிழக பழங்குடியினரில் ஆண்கள் கல்வியறிவு 32.18 ஆகவும், 31.77 ஆகவும் உள்ளது. அவர்களது கல்வியறிவை மேம்படுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியம் என்றார்.
இதுபற்றிய மத்திய தணிக்கைத்துறை அறிக்கையில்,
10ம் வகுப்பு மற்றும் பிளஸ்டூ தேர்வுகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் தேர்ச்சி விகிதம் கடந்த 2002-03 முதலே சரிந்துவரத் தொடங்கியது. 2002-06க்குட்பட்ட காலத்தில் இந்த விகிதம் மிக மோசமான அளவுக்கு குறைந்தது. உடனடியாக இதை அரசு கவனிக்கவேண்டும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பள்ளிகள் மற்றும் மாணவ, மாணவியர் இல்லங்கள் திறக்கப்படுவதில் மிகுந்த காலதாமதம் ஆகிறது. பள்ளிக்கூடங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த தவறுவதால் மாணவர்களின் கல்வியை பாதிக்கிறது.
கல்வி கட்டணச் சலுகை மற்றும் கல்வி நிதியுதவி தேவைப்படும் தலித் மாணவர்களின் சரியான எண்ணிக்கையை தெரிவிக்காத நிலையினால் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக கூடுதல் நிதி ஒதுக்க வழிவகை செய்ய முடியாமல் போகிறது. இதனால் மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவித்த பெரும்பாலான சலுகைத் திட்டங்கள் உரிய நேரத்தில் மாணவர்களை சென்றடையாத அவலம் ஏற்பட்டுள்ளது.
இது போன்ற காரணங்களாலும், அடுத்தடுத்த கல்வியாண்டுகளில் கல்வி உதவித்தொகைக்கான நிதியை தாமதமாக ஒதுக்குவதாலும் இந்த திட்டங்களின் நோக்கமே வீணடிக்கப்படுகிறது.
மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலகப் பணிகளை பெரும்பாலும் வெவ்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களே மேற்கொண்டு வருவதாலும் ஆதிதிராவிடர் மற்றும பழங்குடியினருக்கான திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படாமலும், செயல்படுத்தப்படும் திட்டங்களை முறையாக கண்காணிக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அறிக்கையில் தெரிவி்க்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications