ஈராக்கில் பலியான 2 தமிழர்களின் உடல்கள் சென்னை வருகை
சென்னை: ஈராக்கில் நடந்க குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட இரு தமிழர்களின் உடல்கள் நேற்று சென்னைக்குக் கொண்டு வரப்பட்டன.
மே 8ம் தேதி ஈராக்கில் நடந்த குண்டுவெடிப்பில் நாகை மாவட்டம் திருக்குவளையைச் சேர்ந்த ரமேஷ்குமார் (30), காஞ்சிபுரம் மாவட்டம் மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த செந்தில் (28) ஆகிய இருவரும் பலியானார்கள்.
இருவரும் உடல்களை தமிழகம் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இதன் பலனாக இருவரது உடல்களும் நேற்று சென்னைக்கு கொண்டு வரப்பட்டன.
இருவரது உடல்களையும் தமிழக அரசின் புரோட்டாகால் பி.ஆர்.ஓ. ஹரிஹரன் பெற்றுக் கொண்டார். பின்னர் ரமேஷ்குமாரின் உடலை திருக்குவளை தாசில்தார் இலாஹி பாஷாவிடமும், செந்திலின் உடலை செங்கல்பட்டு தாசில்தார் தங்கப்பாண்டியனிடமும் ஒப்படைத்தார்.
அதன் பின்னர் இருவரது உடல்களும் அவரவர் ஊர்களுக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
செந்திலின் உடல் இருந்த சவப் பெட்டியில், தமிழக அரசின் சார்பில் தாசில்தார் தங்கப்பாண்டியன் மலர் வளையம் வைத்தார். பின்னர் அரசின் சார்பில் ரூ. 1 லட்சம் நிவாரண நிதிக்கான காசோலையை அவரது பெற்றோரிடம் வழங்கினார்.
ரமேஷ்குமாரின் உடலைப் பெற்றுக் கொள்ள வந்திருந்த அவரது உறவினர் சிவமணி செய்தியாளர்களிடம் பேசுகையில், குவைத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில்தான் எனது கணவர் டிரைவராகப் பணியாற்றினார். ஆனால் அவரது விருப்பத்திற்கு எதிராக அவரை ஈராக் பணிக்கு அந்த நிறுவனம் அனுப்பி வைத்தது.
ரமேஷ் குமாருக்கு ஜூன் மாதம் கல்யாணம் நிச்சயித்திருந்தோம். இதற்காக ஜூன் 10ம் தேதி ஊருக்கு திரும்பவிருந்தார். ஆனால் அவரது உடல்தான் இங்கு வந்துள்ளது.
ஈராக்கில் அவர் மிகுந்த சிரமத்தில் இருந்தார். தன்னைப் போல 80 தமிழர்கள் அங்கு அவதிப்பட்டு வருவதாகவும், மத்திய, மாநில அரசுகள் தங்களை மீட்க நடவடிக்ைக எடுக்க வேண்டும் என்றும் ரமேஷ் கோரியிருந்தார். ஆனால் அதற்குள் அவரது உயிரைப் பறித்து விட்டனர் தீவிரவாதிகள் என்றார்.
செந்திலின் சகோதரர் பாலு கூறுகையில், எனது சகோதரர் ஐடிஐ முடித்து விட்டு குவைத்துக்கு வேலைக்கு சென்றிருந்தார். ஆனால் அவர் வேலை பார்த்து வந்த நிறுவனத்தினர், கட்டாயப்படுத்தி ஈராக் அனுப்பி வைத்தனர். எனது சகோதரரின் உயிருக்கு உரிய இழப்பீட்டை குவைத் நிறுவனத்திடமிருந்து மத்திய அரசு பெற்றுத் தர வேண்டும் என்றார்.
செந்திலின் உடல் நேற்றே தகனம் செய்யப்பட்டு விட்டது. ரமேஷ்குமாரின் உடல் இன்று அடக்கம் செய்யப்படுகிறது.












Click it and Unblock the Notifications