ஆட்சி அமைக்க முயன்ற காங்-கெளடா

கர்நாடக சட்டசபைத் தேர்தலில் பாஜக 110 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 80 இடங்களில் வெற்றி கிடைத்துள்ளது. மதச்சார்பற்ற ஜனதாதளத்திற்கு 28 எம்.எல்.ஏக்கள் கிடைத்துள்ளனர். இந்த இரு கட்சிகளிடமும் சேர்த்து 108 எம்எல்ஏக்கள் உள்ளனர்.
இது தவிர சுயேச்சைகள் 6 இடங்களில் வென்றுள்ளனர்.
பாஜக ஆட்சி அமைக்க இன்னும் 3 எம்.எல்.ஏக்கள் தேவை. இதற்காக அது சுயேச்சைகளை நாடியது. சுயேச்சைகளில் ஒருவர் பாஜக அதிருப்தி வேட்பாளராக போட்டியிட்டு வென்றவர் என்பதால் அவரது ஆதரவை பாஜக எளிதாக பெற்றுவிட்டது.
ஆனால், மேலும் 4 பேர் காங்கிரஸ் அதிருப்தியாளர்களாக போட்டியிட்டு வென்றவர்கள், இன்னும் ஒருவர் மதசார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்தவர். இவரும் அதிருப்தி வேட்பாளராக போட்டியிட்டு வென்றவர்.
இதில் காங்கிரஸைச் சேர்ந்த அதிருப்தியாளர்களில் இருவர் மூத்த தலைவர் சித்தராமையாவின் தீவிரமான ஆதரவாளர்கள். இந்த இருவரும் சித்தராமையாவை முதல்வராக்கினால் காங்கிரஸை ஆதரிக்கத் தயார் என்று அறிவித்தனர்.
ஆனால், கெளடா- குமாரசாமியுடன் மோதலால் மதசார்பற்ற ஜனதா தளத்தை விட்டு வெளியேறியவர் சித்தராமையா. இதனால் அவரை முதல்வராக்க கெளடா தரப்பு யோசித்ததாகக் கூறப்பட்டது.
ஆனால், பாஜகவை ஆட்சியமைக்க விடாமல் தடுக்க காங்கிரசுடன் எந்த வகையான கூட்டணிக்கும் குமாரசாமி தயாரானார். சித்தராமையாவைக் கூட முதல்வராக ஏற்க அவர் தயாரானதாகக் கூறப்படுகிறது.
இதை உறுதிப்படுத்தும் வகையில், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தர தாங்கள் தயாராக இருப்பதாக தேவெ கெளடா அறிவி்த்தார். காங்கிரஸ்-கெளடாவின் இந்த திடீர் கூட்டணி முயற்சி, கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இருப்பினும் கெளடா-குமாரசாமியை நம்பி மறுபடியும் அவர்களுடன் கை கோர்க்க கிருஷ்ணா உள்ளிட்ட சில மூத்த காங்கிரஸ் தலைவர்கள் விரும்பவில்லை. அவர்கள் பேசாமல் எதிர்க் கட்சி வரிசையில் அமரலாம் என காங்கிரஸ் தலைமையிடம் எடுத்துக் கூறியதாகத் தெரிகிறது.
இந் நிலையில், சித்தராமையா ஆதரவு இரு சுயேச்சைகளில் ஒருவர் இன்று பிற்பகலில் அந்தர் பல்டி அடித்து பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்ததையடுத்து காங்கிரஸ்-கெளடாவின் ஆட்சி அமைக்கும் பாதியில் முயற்சிகள் நின்றன.
தலைவராக எதியூரப்பா தேர்வு:
இந் நிலையில் சட்டசபை பாஜக தலைவராக இன்று எதியூரப்பா ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். பெங்களூரில் நடந்த பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், எதியூரப்பா தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
இக்கூட்டத்தில் கட்சி மேலிடப் பார்வையாளர் அருண் ஜேட்லி, மாநில பாஜக தலைவர் சதானந்த கெளடா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இன்று மாலை ஆளுநர் ராமேஷ்வர் தாக்கூரை பாஜக தலைவர்கள் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகின்றனர்.
இதில் பாஜக எம்எல்ஏக்கள் தவிர, ஒரு காங்கிரஸ் சுயேச்சை எம்எல்ஏ, ஒரு மதசார்பற்ற ஜனதா தள சுயேச்சை எம்எல்ஏ மற்றும் பாஜக அதிருப்தி சுயேச்சை எம்எல்ஏ ஆகியோரும் பங்கேற்று எதியூரப்பாவை தேர்வு செய்தனர்.












Click it and Unblock the Notifications