For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தனியார் நிறுவனத்திடம் காப்பீடு: நோக்கம் என்ன?-ஜெ

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கான புதிய நலவாழ்வு காப்பீட்டு திட்டத்தை, இந்திய நிறுவனங்களை விட்டு விட்டு பன்னாட்டுத் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டிய நோக்கம் என்ன? என
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழக அரசு ஊழியர்களுக்கான புதிய நலவாழ்வு காப்பீட்டு திட்டம் வரும் ஜூன் மாதம் முதல் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய திட்டத்தின்படி, ஒவ்வொரு நான்கு ஆண்டு காலத்திலும், அரசு ஊழியர்கள் தங்களுக்கும், தங்களது குடும்பத்தினருக்கும் ஏற்படும் நோய்களுக்கு மருத்துவ சிகிச்சைக் கட்டணத் தொகை இரண்டு லட்சம் ரூபாய் வரை சிகிச்சை பெறலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்காக ஜூன் மாதத்தில் இருந்து ஒவ்வொரு அரசு ஊழியரின் சம்பளத்தில் இருந்தும் 25 ரூபாய் பிடித்தம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் அரசு ஊழியர்கள் மட்டுமின்றி பொதுத் துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், சட்டப்படியான வாரியங்கள் மற்றும் பல்கலைக் கழகங்களில் பணியாற்றும் அலுவலர்களும் பயன்பெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைடு இன்சூரன்ஸ் கம்பெனி என்ற பன்னாட்டுத் தனியார் காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் தி.மு.க. அரசு இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளது.

இதன்படி, சுமார் 15 லட்சம் அரசு ஊழியர்களிடம் இருந்து ஆண்டு ஒன்றுக்கு பிடித்தம் செய்யப்படும் 45 கோடி ரூபாய், மேலும் அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனம் சார்பில் 30 கோடி ரூபாய், ஆக மொத்தம் 75 கோடி ரூபாய்க்கான பிரீமியத் தொகையை மேற்படி பன்னாட்டுத் தனியார் நிறுவனத்திடம் உடனடியாகச் செலுத்த தி.மு.க. அரசு முடிவெடுத்துள்ளது.

இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பு கருவூல கணக்குத் துறை இயக்குநரிடம் ஒப்படைக்கப்பட்டு இருப்பதால், அங்குள்ள ஊழியர்களுக்குக் கூடுதல் பணிச் சுமை ஏற்பட்டிருக்கிறது.

மேற்படி தனியார் நிறுவனத்திற்கு தமிழ்நாட்டில் உள்ள 12 மாவட்டங்களில் அலுவலகங்களே இல்லாத நிலையில், அரசு ஊழியர்கள் சிகிச்சை பெறுவதற்கான மருத்துவமனைகளின் பட்டியலை பன்னாட்டு தனியார் காப்பீட்டு நிறுவனம் இதுவரை வெளியிடாத நிலையில், அவசர அவசரமாக அந்த நிறுவனத்திற்கு இவ்வளவு பெரும் தொகையை முன்கூட்டியே கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ், நியூ இந்தியா அஷ்யூரன்ஸ், ஓரியண்டல் இன்சூரன்ஸ், லைப் இன்சூ ரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா போன்ற மத்திய அரசு நிறுவனங்கள் இது போன்ற சேவையில் ஈடுபட்டிருக்கும் போது, ஒரு பன்னாட்டுத் தனியார் நிறுவனத்திடம் இந்தத் திட்டத்தை ஒப்படைக்க வேண்டியதன் நோக்கம் என்ன?.

இதய நோய், உடனடி அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு போன்ற உடனடி சிகிச்சை தேவைப்படும் போது இது போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டால் அரசு ஊழியர்களின் உடல்நிலை மேலும் பாதிக்கப்படும்.

புகார்கள் தொடர்பான குழுக்களில் தனியார் பன்னாட்டுக் காப்பீட்டு நிறுவனத்தின் சார்பாக பிரதிநிதிகள் இடம்பெற அரசாணையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதே சமயத்தில், அரசு ஊழியர்கள் சார்பாக பிரதிநிதிகள் இடம் பெற வழிவகை செய்யப்படவில்லை.

அரசு ஊழியர்கள் நலன் கருதி, இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பு, ஊழியர் சங்கங்களை கலந்து ஆலோசித்து அதில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து, அவர்கள் திருப்தி அடையும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X