தமிழகத்தில் அக்னி நட்சத்திர உக்கிரம் குறைந்தது
சென்னை: தமிழகம் முழுவதும் வாட்டி வதைத்து வந்த அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கம் குறைய ஆரம்பித்துள்ளது. மாலை நேரங்களில் இதமான காற்றும், ஜிலுஜிலுவென மழையும் பெய்து வருவதால் மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட ஆரம்பித்துள்ளனர்.
கடந்த ஒரு மாதமாக வாட்டி வதைத்து வருகிறது கத்திரி எனப்படும் அக்னி நட்சத்திர வெயில். இதனால் தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில் 100 டிகிரிக்கு மேல்தான் வெயில் அடித்து வந்தது. குறிப்பாக சென்னையில் மிகக் கடுமையாக இருந்தது வெயில்.
அதிலும் கடந்த 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை 108 டிகிரியாக இருந்தது வெயில். மற்ற நாட்களில் சராசரியாக 103 முதல் 106 டிகிரி என இருந்தது.
அதிகபட்சமாக அரக்கோணத்தில் 110 டிகிரி வெயில் அடித்தது. புதன்கிழமையுடன் தமிழகத்தில் கத்திரி முடிவுக்கு வருகிறது.
இந் நிலையில் சென்னை உள்பட பல நகரங்களிலும் பகல் நேர வெப்ப நிலையின் தாக்கம் குறைந்துள்ளது. 100 டிகிரிக்கு குறைவாக வெயில் அடிக்கத் தொடங்கியுள்ளது. மேலும் மாலை நேரங்களில் பல ஊர்களில் நல்ல காற்றும், லேசான மழையும் பெய்கிறது.
கத்திரி முடிந்ததும் வெயிலின் தாக்கம் மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
