இ-டிக்கெட்டுக்கு பெரும் வரவேற்பு- வேலு
டெல்லி: நாள்தோறும் சராசரியாக 80,000 ரயில் பயண டிக்கெட்டுகள் இன்டெர்நெட் மூலம் பதிவு செய்யப்படுகிறது. இ-டிக்கெட் முறைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது என்று ரயில்வே இணை அமைச்சர் வேலு தெரிவித்தார்.
டெல்லி ரயில்நிலையத்தில் இந்தியன் வங்கி சார்பில் இ-டிக்கெட் வசதி கொண்ட ஏடிஎம் மையத்தை அமைச்சர் வேலு இன்று தொடங்கி வைத்து பேசியதாவது:
கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பயணிகள் வசதிக்காக இ-டிக்கெட் மற்றும் ஐ-டிக்கெட் முன்பதிவு முறை அமல்படுத்தப்பட்டபோது தினசரி சில நூறு டிக்கெட்டுகள்தான் விற்றன.
தற்போது இந்த நடைமுறைக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் சராசரியாக நாள்தோறும் 80,000 இ-டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுகின்றன.
நாட்டில் ஒரு நாளைக்கு 8 லட்சம் டிக்கெட்டுகள் பதிவாகின்றன. இதில் 10 சதவீதம் இ-டிக்கெட்டுகள்தான்.
நாடுமுழுவதும் உள்ள இந்தியன் வங்கி ஏடிஎம்களில் இ-டிக்கெட் பெறும் வசதியை ஏற்படுத்துவதற்கு ரயில்வேயின் ஐஆர்சிடிசி நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி டெல்லி ரயில்நிலையத்தில் புதிதாக இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதேபோல் பாரத ஸ்டேட் வங்கி, யூனியன் வங்கி உள்ளிட்ட மற்ற வங்கிகளின் ஏடிஎம்களிலும் இந்த சேவையை தொடங்குவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம்.இவ்வாறு வேலு கூறினார்.
ரயில் நிலையங்களில் முன்பதிவுக்கு ஏற்படும் நெரிசலைத் தவிர்க்கவே இ-டிக்கெட் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் சில நிமிடங்களிலேயே எளிதாக டிக்கெட் வாங்கமுடியும் என்பதால் வாடிக்கையாளர்களுக்கு நல்ல வசதியாக அமைந்துவிட்டது என்று இந்தியன்வங்கி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் எம்.எஸ்.சுந்தரராஜன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications