தமிழகத்தில் பெட்ரோலுக்கு கடும் தட்டுப்பாடு

தமிழகம் முழுவதும் பெட்ரோலுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. பங்குகளுக்கு போதிய அளவில் வினியோகம் இல்லாமையும், பதுக்கலும், கடும் விலை உயர்வு பீதியில் வாகன ஓட்டிகள் அதிக அளவில் பெட்ரோலை வாங்கி வருவதுமே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.10ம், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.5ம், சமையல் கேஸ் விலையை சிலிண்டருக்கு ரூ.50ம் உயர்த்த வேண்டும் என மத்திய அரசை பெட்ரோலிய அமைச்சகம் வலியுறுத்தி வருகிறது.
இனியும் விலையை உயர்த்தாமல் மானியம் தந்து வந்தால் நாட்டின் பொருளாதாரமே முடங்கும் நிலை உருவாகிவிட்டது. இதனால் பெட்ரோலிய அமைச்சகம் பரிந்துரைக்கும் அளவில் பாதி அளவுக்காவது விலை உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விலை உயர்வு எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம்.
இதற்கிடையே நஷ்டத்தை சரி கட்ட பல்வேறு மறைமுக நடவடிக்கைகளில் எண்ணை நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. விலையை உயர்த்திய பின் வினியோகத்தை சீராக்கலாம் என்ற திட்டத்துடன் பங்குகளுக்கு வழக்கமாக தரும் பெட்ரோல் சப்ளையை அவை குறைத்துவிட்டன.
மேலும் விலை உயர்வை வைத்து கொள்ளை லாபம் அடிக்கும் முயற்சியாகல பல பங்குகளிலும் பெட்ரோல் பதுக்கப்பட்டு வருகிறது.
இத்தோடு விலை உயர்வு கடுமையாக இருக்கும் என்பதால் இப்போதே டேங்கை நிரப்பும் வேலைகளிலும், கேன்களில் பெட்ரோல் வாங்கி வைக்கும் வேலைகளிலும் பொது மக்கள் இறங்கியுள்ளனர்.
இதனால் பெட்ரோலுக்கு செயற்கையான தட்டுப்பாடு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் காரணங்களால் தமிழகம் முழுவதும் பெட்ரோலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை, மதுரை, கோவை, நெல்லை, ஈரோடு, கடலூர் மற்றும் புதுச்சேரி போன்ற நகர்களில் சில பங்குகளில் ரேஷன் முறையில் பெட்ரோல், டீசல் வினியோகிக்கப்பட்டது.
சில பங்குகளில் லிட்டர் ரூ. 75 வரை பெட்ரோல் விற்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் ஒரு நபருக்கு தலா ஒரு லிட்டர் பெட்ரோல் தான் கொடுக்கப்பட்டது.
பல பங்குகளில் ஸ்பீடு பெட்ரோல் தான் இருக்கிறது என்று கூறி விலை உயர்வான அந்த பெட்ரோலை வாடிக்கையாளர்களை கட்டாயப்படுத்தி வாங்க வைக்கின்றனர்.
ஆனால், பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டை எண்ணெய் நிறுவனங்கள் வழக்கம்போல் மறுத்துள்ளன. பாரத் பெட்ரோலியம் நிறுவன மண்டல மேலாளர் மோகன் நாயர் கூறுகையில்,
சென்னையில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு எங்கும் இல்லை. விலை உயரப் போகிறது என்ற எதிர்ப்பார்ப்பை தொடர்ந்து கார்கள், மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள் அனைவரும் டேங்க் நிறைய பெட்ரோல் போடுகின்றனர்.
இதன் காரணமாக கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசலுக்கு திடீரென தேவை அதிகரித்து விட்டது. இதனால் செயற்கை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
எங்களுக்கும் இது தொடர்பாக நிறைய புகார்கள் வந்துள்ளது. பெட்ரோல், டீசல் சப்ளையை நாங்கள் குறைக்கவில்லை. வழக்கமான சப்ளை செய்யப்படுகிறது என்றார்.
இந்தியன் ஆயில் நிறுவன தென் பிராந்திய சீனியர் மானேஜர் சிதம்பரம் கூறுகையில்,
சென்னை மற்றும் அதன் சுற்றுப் புறங்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் மூலம் ஒரு மாதத்துக்கு 11,000 கிலோ லிட்டர் பெட்ரோலும், 18,000கிலோ லிட்டர் டீசலும், கொடுக்கப்படுகிறது. இந்த அளவை நாங்கள் குறைக்கவில்லை. அதே சப்ளை நீடிக்கிறது.
கடந்த வாரம் பெட்ரோல்-டீசல் விலை உயரக் கூடும் என வதந்தி கிளம்பியதால் வாடிக்கையாளர்கள் நிறைய பெட்ரோலை வாங்க ஆரம்பித்தனர். இதனால் சில பகுதிகளில் அளவுக்கு அதிகமாக விற்பனையானதால் தட்டுப்பாடு போன்ற சூழல் ஏற்பட்டது. தற்போது அதுவும் சரியாகி விட்டது என்றார்.












Click it and Unblock the Notifications