கணவரை தாக்கிவிட்டு மனைவியை கற்பழிக்க முயற்சி-போலீஸ்காரர் கைது
செங்கம்: கணவரை தாக்கிவிட்டு மனைவியை தூக்கிச் சென்று பலாத்காரம் செய்ய முயன்ற போலீஸ்காரர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு்ள்ளனர்.
செங்கம் போலீஸ் லைன் தெருவில் வசித்து வருபவர் அப்துல் ரஷீத். இவரது மனைவி பர்வீன் (30). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இவர்கள் மோட்டார் சைக்கிளில் குடும்பத்துடன் சாத்தனூர் அணைக்கு சுற்றுலா சென்றனர். கரியமங்கலம் கிராமம் பயணிகள் வழி உணவகம் அருகே சென்றபோது 3 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை வழி மறித்தனர்.
போதையில் இருந்த அந்தக் கும்பல் ரஷீத்தை உருட்டுக் கட்டையால் தாக்கியது. இதில் அவர் மயங்கவே பர்வீனை தூக்கிச் சென்று பலாத்காரம் செய்ய முயன்றது. அவர்கள் கடும் போதையில் இருந்ததால் அவர்களை பர்வீன் தள்ளி விட்டு விட்டு ஓடி வந்தார்.
அப்போது அந்த வழியே சிலர் வரவே அக் கும்பல் தப்பியோடிவிட்டது. இதையடுத்து ரஷீத்-பர்வீன் செங்கம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
செங்கம் டி.எஸ்.பி. தில்லைநாயகம் உடனே களத்தில் இறங்கினார். போலீசார் அப் பகுதிக்கு விரைந்து 3 பேரையும் வளைத்தனர்.
விசாரணையில் அவர்கள் பாலமுருகன், ஆறுமுகம், பழனிவேல்ராஜன் என்பது தெரிய வந்தது.
பாலமுருகன் நீலகிரி மாவட்டத்தில் தேவர்சேவை போலீஸ் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருவது தெரிய வந்தது. உறவினர் வீட்டு திருமணத்திற்கு வந்துள்ளார். நண்பர்களுடன் சேர்ந்து குடித்துவிட்டு போதையில் கற்பழிப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதையடுத்து அவரையும் மற்ற இருவரையும் டிஎஸ்பி கைது செய்ய உத்தரவிட்டார்.
போலீஸ்காரரே கற்பழிப்பு முயற்சியில் ஈடுபட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications